மார்த்தாண்டம்: தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் 5 வயது மாணவிக்கு பள்ளியில் வைத்தே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில் மகள் உள்ளனர். மகள் பளுகல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறாள். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்ற மாணவி மாலையில் வீட்டுக்கு வந்தபோது மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள். உடல் கடுமையாக வலிப்பதாகவும் கூறி கதறி அழுதிருக்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் பதற்றத்துடன் விபரத்தை கேட்டபோது மாணவி பகீர் தகவலை கூறியிருக்கிறாள். பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியை ஒருவர் வகுப்பில் இருந்த அந்த மாணவியை ஒரு அறைக்கு அழைத்து சென்று, கதவை அடைத்துக்கொண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியிருக்கிறாள். தாயார் உடனே மாணவியை பாறசாலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓவிய ஆசிரியைக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவனிடம் அத்து மீறல்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். அந்த பள்ளியில் 10 நாட்களுக்கு முன் நடந்த மருத்துவமுகாமில் சிறுவனுக்கு கண்ணில் உள்ள கட்டிக்கு ஆபரேஷன் செய்யும்படி கூறியுள்ளனர். இதற்காக பெற்றோர் சிறுவனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்தப் பரிசோதனையில் சிறுவனுக்கு பால்வினை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
விசாரித்தபோது, 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண் தன்னை வீட்டுக்கு அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து அந்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நிர்வாண படம் எடுத்து மிரட்டி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
திருச்சி திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் 2012ல் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் 2018ல் தனியார் கம்பெனி பிட்டரான மாரிமுத்துவை 2வதாக திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு 5ம் வகுப்பு படித்த போதிலிருந்தே கடந்த 5 ஆண்டாக மாரிமுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிறுமியை நிர்வாண புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி தற்போது 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சில நாட்களுக்கு முன் தாய் ராதாவிடம் சிறுமி கூறவே, அவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.