சென்னை: நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: யுஜிசி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாதது கவனத்துக்கு வந்துள்ளன. யுஜிசியின் ராகிங் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும்.
இதை செய்ய தவறுவது விதிமீறல் என்பதையும் தாண்டி மாணவர் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும். இதையடுத்து இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் கல்லூரிகள் தங்கள் வளாகத்துக்குள் ராகிங் செய்வதை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். இதை மீறினால் யுஜிசி நிதியுதவியை திரும்பப் பெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதில் யுஜிசி உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.