சேலம்: கென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் கெகோங்கோ டேனியல் (29). இவர் சேலம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். 2021ல் சேலத்திற்கு வந்தவர், படிப்பை பாதியில் நிறுத்தினார். இவருடன் காதலியான உகாண்டாவை சேர்ந்த நபுகீரா ஹெலனும் (33) தங்கியிருந்தார். இவர் புதுச்சேரியில் படித்து வருகிறார். அங்கிருக்கும் நேரத்தை விட, டேனியலுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாம். இந்நிலையில் கடந்த 27ம் தேதி மது குடித்துவிட்டு, மாடியின் சுவரில் அமர்ந்திருந்த டேனியல் திடீரென தவறி கீழே விழுந்தார்.
காதலி நபுகீரா ஹெலன் கதறிக்கொண்டு ஓடிவந்து தூக்கினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் டேனியலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது தலை, இடுப்பு, கால் ஆகிய இடங்களில் படுகாயம் இருந்தது. கன்னங்குறிச்சி போலீசார் அவரிடம் விசாரித்தபோது, காதலியுடன் தங்கியிருந்ததாகவும், தங்களுக்குள் எந்த தகராறும் இல்லை எனவும், மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென டேனியல் உயிரிழந்தார்.