உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இதன் மூலம் திருப்பூர் கோவை மாவட்டத்தில் சுமார் 3.25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உடுமலை எளையமுத்தூர் பிரிவு அரசு கலைக்கல்லூரி அருகே உடுமலை கால்வாய் கரையை தாண்டி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செல்கிறது. மேலும் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறிவருகிறது.
கடந்த ஆண்டும் இதே இடத்தில் வாய்க்காலில் கரையை கடந்தது தண்ணீர் வெளியேறியது. கடைமடை வரை தண்ணீர் விரயம் இன்றி செல்ல பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எளையமுத்தூர் பிரிவு பகுதியில் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி இருபுறமும் கரைகளை 3 அடி உயர்த்தி கட்டினால் மட்டுமே பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் விரயமாகாமல் கடைமடையை எட்டும்.