*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை செல்கிறது. அமராவதி நகர் செக்போஸ்ட், சின்னாறு செக்போஸ்ட்களை கடந்து மறையூர் வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும், மூணாறு மற்றும் மறையூரில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர, உடுமலை-மூணாறு இடையே ஏராளமான சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. வெளியூர்களில் இருந்தும் இந்த வழியாக பேருந்துகள் சென்று வருகின்றன.இந்த வழித்தடத்தில் அமராவதி நகர் செக்போஸ்ட் தாண்டி எஸ்பெண்டு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடம் மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும், இப்பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். அவ்வப்போது ஒற்றை யானையோ அல்லது கூட்டமாகவோ யானைகள் சாலையில் நிற்பது வழக்கம். அந்த நேரத்தில் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழ்நிலையில் யானைகளால் ஆபத்து நேர வாய்ப்புள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நிற்கின்றன. இதனால் பயணிகள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஏழுமலையான் கோயில் திருவிழா போன்ற காலங்களில் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் அதிகளவில் வருவதால் அப்போது மேலும் நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “இதுபற்றி பலமுறை நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும்” என்றனர்.