Friday, July 18, 2025
Home செய்திகள்Banner News நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

by Francis

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இன்று (11.06.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நான்காண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.38.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 31 திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.8.04 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 2 திட்டப்பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.16.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 35 திட்டப்பணிகள், பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் சார்பில் ரூ.33.84 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 31 திட்டப்பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.303.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.663.07 கோடி மதிப்பீட்டில் 62 புதிய திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.217.37 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.47.49 கோடி மதிப்பீட்டில் 28 புதிய திட்டப்பணிகள், பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் சார்பில் ரூ.47.70 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 49 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர பேட்டரி மூலம் இயங்கும் 2 வாகனங்கள், குப்பை பெருக்கும் 2 இயந்திர வாகனங்கள், 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 11 புதிய வாகனங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், ஓட்டுநர்களுக்கு சாவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 62 மாணவர்களுக்கும், மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த 38 ஆசிரியர்களுக்கும், 14 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் என மொத்தம் 114 நபர்களுக்கு ரூ.7,26,000 ஊக்கத்தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆற்றிய உரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெறுகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமையடைகின்றேன். நம்முடைய அரசு கடந்த 4 ஆண்டுகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக செய்துள்ள எண்ணற்ற சாதனைகளை பணிகளை, திட்டங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை இங்கே நாம் திறந்து வைத்திருக்கின்றோம். அதுமட்டமல்ல, சென்னை மாநகராட்சி தொடங்கி தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கின்ற பேரூராட்சி வரை, ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கின்றோம்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். திராவிட மாடல் என்றால், எல்லாருக்கும் எல்லாம் என்பது மட்டுமில்ல, எல்லா ஊருக்கும் எல்லாம் என்பதற்கான ஒரு சிறந்த உதராணமாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் நம்முடைய கழகம் 6 முறை ஆட்சி அமைத்திருக்கிறது என்றால், அதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தது, இந்த நகராட்சி நிர்வாகத்துறைதான் காரணம்.
திராவிட முன்னேற்ற கழகம் முதன்முதலாக 1959 ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை மாநகராட்சியை வென்று, கைப்பற்றியது. அப்போது தீட்டப்பட்ட திட்டங்கள் தான், இன்றைக்கு வளர்ச்சி பெற்ற சென்னைக்கு ஒரு விதையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டன. நம்முடைய முதலமைச்சர் , அன்றைக்கு சென்னையினுடைய மேயராக இருந்த போது, சிங்காரச் சென்னை என்ற திட்டத்தை துவங்கி வைத்தார். சென்னையை பார்த்து, பார்த்து செதுக்கினார். இன்றைக்கு சென்னையில் குடிநீர் பஞ்சம் கிடையாது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள் இருக்கின்றன. மெட்ரோ இரயில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த சாதனைக்கெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் அமைத்தவர் நம்முடைய முதலமைச்சர் தான். அதுமட்டுமல்ல, உள்ளாட்சி துறையின் அமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக நம்முடைய முதலமைச்சர் அன்றைக்கு செயல்படுத்திய திட்டங்கள் தான் இந்தியாவிலேயே அதிகமாக நகரமயமாகும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவிற்கு நகரமயமான மாநிலம் என்றால் அது தமிழ்நாடு மட்டும் தான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, மற்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநகரம் மட்டும்தான் அங்கு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக ஏராளமான மாநகரங்கள் இன்றைக்கு உருவாகி இருக்கின்றன. அதற்கு நம்முடைய முதலமைச்சர் தந்த திட்டங்கள் தான் காரணம். எந்த திட்டம் இல்லை என்று கேட்கும் அளவிற்கு, ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சிக்கென பல்வேறு புதிய பணிகளுக்கு இன்றைக்கு நாம் அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த பருவ மழை நேரத்தில் சென்னை மாநகரில் இருக்கின்ற நீர்வழிப்பாதைகளை எல்லாம் ஆய்வு செய்திருந்தோம்.

இந்த நீர்வழிப்பாதைகளை தூர்வாரும் வண்ணம் தூர்வாரும் வண்ணம், ரூ.58 கோடி மதிப்பீட்டில் உள்ளகரம் கால்வாய், வீராங்கல் ஓடை, அம்பத்தூர் சிட்கோ கால்வாய் மற்றும் பாடிக்குப்பம் கால்வாய், கொடுங்கையூர் பிரதான கால்வாய், வியாசர்பாடி கால்வாய், காந்தி கால்வாய், இரயில்வே ஆன்ஸ்லி கால்வாய், மாம்பலம் கால்வாய், நந்தனம் கால்வாய், அடையாறு சிட்கோ கால்வாய், ரெட்டிக் குப்பம் கால்வாய், செல்லம்மாள் கால்வாய், ராஜ்பவன் கால்வாய், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள வீராங்கல் ஓடை ஆகியவற்றை மேம்படுத்தும் பணியையும் இங்கே தொடங்கி வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல சாலைப்பணிகளையும் தொடங்கி வைத்து இருக்கிறோம். முக்கியமாக சென்னை மட்டுமின்றி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பாதாளச் சாக்கடை திட்டங்களை இன்றைக்கு துவங்கி வைத்திருக்கின்றோம். மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கில் தான் முதலமைச்சர் இப்படி பல்வேறு திட்டங்களை தந்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் நம்முடைய அரசு செய்து தர தயாராக இருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, பேணி பாதுகாப்பதும் பொதுமக்களின் பொறுப்பு என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கே சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். உயர்கல்வியிலும் நீங்கள் சாதனை படைக்க எங்களுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய உயர்கல்விக்கு வழிகாட்ட இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றது. தமிழ்புதழ்வன் திட்டம், உங்களுடைய உயர்கல்விக்கு வழி காட்ட நான் முதல்வன் திட்டம். இப்படி பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 49 பேருக்கு இங்கே பணி நியமன ஆணைகளை தர இருக்கின்றோம். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர்.கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். சிவராசு, இ.ஆ.ப., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi