புதுடெல்லி: ஒன்றிய அரசின் உதான் திட்டமானது 93 வழித்தடங்களில் செயல்படவில்லை. மோடி அரசு திறமையற்றது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்த 2016ம் ஆண்டு நாட்டின் சிறிய நகரங்களிலும் விமானங்களை இயக்கும் வகையில் உதான் திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில் இந்த திட்டம் செயல்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘செருப்பு அணிபவர்கள் கூட விமானத்தில் பயணிக்க அனுமதிக்கும் பிரதமர் மோடி அரசின் வாக்குறுதி அவர்களின் அனைத்து வாக்குறுதிகளையும் போலவே நிறைவேற்றப்படவில்லை. இதனை நாங்கள் கூறவில்லை. சிஏஜி அறிக்கை இதனை சுட்டிக்காட்டியுள்ளது. 93 சதவீத வழித்தடங்களில் உதான் திட்டம் செயல்படவில்லை. விமான நிறுவனங்களில் தணிக்கை கூட செய்யப்படவில்லை. அதிகம் விளம்பரம் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சேவைகளும் முடங்கியுள்ளன. உதான் கிடைக்கவில்லை. வெறும் பொய்களையும், பொய் வாக்குறுதிகளையும் அரசு பேசிவருகின்றது. இதுபோன்ற திறமையற்ற அரசை நாடு ஒருபோதும் மன்னிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.