தண்டையார்பேட்டை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது மகிழ்ச்சியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது என சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தங்க சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், சென்னை பூக்கடை தங்கசாலை தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்து பக்தர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதசார்பற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என பார்க்காமல் அனைத்து மதத்தினரும் ஒன்று நினைத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்லும் தமிழக மக்கள், தமிழக அரசிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும். எந்த வேலைக்கு செல்கிறோம் என்பதை ஆராய்ந்து செல்ல வேண்டும். போலியான ஏஜென்ட் மூலம் செல்பவர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுகிறார்கள். பிரச்னை ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவது சிரமமாக உள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட பிரச்னையின்போது இதுவரை 15,000 பேரை பத்திரமாக தாய்நாட்டிற்கு மீட்டு வந்துள்ளோம். எதிர்காலத்தில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடை பெறவேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது மகிழ்ச்சியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். இதில், அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சீனிவாசன், ராஜேஷ் குமார், ரமேஷ் பங்கேற்றனர். பூங்காநகர் பகுதியில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு சமபந்தி விழுந்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
லிங்கிசெட்டி தெருவில் உள்ள மல்லீஸ்வரர் சென்ன கேசவபெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள கோயில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் அன்னதானம் அருந்தினர்.