மதுராந்தகம்: மதுராந்தகத்தில் கலைஞரின் நூற்றாண்டு கொள்கை திருவிழாவில் பங்கேற்று, கலைஞரின் உருவ சிலையை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொள்கை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 19ம் தேதி (நாளை) திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணியளவில் குருவிமலையில் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். மதுராந்தகம் நகரில், மாலை 4 மணியளவில் கலைஞரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். பின்னர், 5 மணிக்கு மதுராந்தகம் கலைஞர் திடலில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளிகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
மேலும், பல்லாயிரக்கணக்கான திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். தமிழ்ச்செல்வன், பாபு, குமணன், குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எம்ஏ எழிலரசன், இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், கண்ணன், தம்பு, சத்தியசாய், சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.எனவே, திமுகவினர் திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.