நெல்லை: திமுக இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பரில் சேலத்தில் நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று மாநாடு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதுதவிர அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (26ம் தேதி) இரவு நெல்லை வந்தார்.
இன்று (27ம் தேதி) காலை 9 மணிக்கு பாளை. கேடிசி நகர் அருகே நடந்த நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து காலை 11 மணிக்கு கேடிசி நகர் மாதா மாளிகையில் நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த விழாவில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பின்னர் கேடிசி நகர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நெல்லை மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் வருவாய் துறையினருக்கான நூலகத்தை திறந்து வைக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். இத்துடன் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவில் கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறார்.