தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி. இங்குதான் 45 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட 13 சரணாலயங்களில் இச்சரணாலயமும் ஒன்று. 1999 டிசம்பரில் இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் போன்றவை இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இவை தவிர இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், இந்தியப் பாறை நாரை, வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, நாமக்கோழி, ஊதா நாரை, சிறிய நீர்க்காகம், துடுப்பு வாயன், செங்கால் நாரை, நீலத் தாழைக்கோழி, இரவுநாரை (Night Heron), பாம்புத்தாரா (Darter), கூழைக்கடா, வெள்ளை ஐபிஸ் போன்ற பல வகைப் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
மேலும் சைபீரியா, ரஷ்யா, திபெத் உள்ளிட்ட நாடுகளின் பறவைகளும் பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து இந்த சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்து மீண்டும் குட்டிகளுடன் திரும்பி செல்கின்றன. 45 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மேட்டூர் அணையிலிருந்து பாசனவசதி பெறும் ஏரியால் பாசனம் பெறுகிறது. ஏராளமான பறவைகள் கூடுகளை கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரித்து சதுப்பு நிலப்பகுதியில் இரை தேடி பறப்பதும், குஞ்சுகளுக்கு இரையை ஊட்டுவதும் கண்கொள்ளாக் காட்சியாகும். ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை இந்த ஏரி வறண்ட நிலையில் காணப்படும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இச்சரணாலயத்தில் வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 10,000 ஆக உயர்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை பார்வையிடச் சிறந்த நாட்களாகும்.