மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். வைகாசி பவுர்ணமியையொட்டி இந்த கோயிலில் இன்று காலை வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் பெருமாள் கோபிநாதன் சகிதமாக எழுந்தருளி உதய கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கருட வாகனத்தில் பெருமாள் புறப்பட்டு பாமணி ஆற்றங்கரையில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சென்றார்.
இதேபோல் மன்னார்குடி கோபிநாத சுவாமி கோயில், சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயில், சேரன்குளம் நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயில், தேவங்குடி கோதண்டராமர் கோயில், சாத்தனூர் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், ஏத்தக்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருமாக்கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோயில், இருள்நீக்கி லட்சுமி நாராயண சுவாமி கோயில், காளாச்சேரி னிவாச பெருமாள் சுவாமி கோயில், பூவனூர் கோதண்டராமர் வரதராஜ சுவாமி கோயில், கஸ்தூரி ரங்கபெருமாள் கோயில் ஆகிய 12 வைணவ கோயில்களில் இருந்து தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக பாமணி ஆற்றங்கரைக்கு பெருமாள்கள் வந்தனர்.
பின்னர் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் உதய கருட சேவையில் பக்தர்களுக்கு ஒரு சேர அருள்பாலித்தனர். மன்னார்குடியில் வைகாசி பவுர்ணமியையொட்டி நடந்த உதய கருடசேவையில் முதல் முறையாக 12 வைணவ கோயில்களில் இருந்து பெருமாள்கள் வந்து ஒரே இடத்தில் சங்கமித்து கருட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராஜகோபாலசாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன், வானமாமலை மடம் சேரங்குளம் சவுரிராஜன் செய்திருந்தனர்.