Friday, March 1, 2024
Home » உச்சத்துக்கு போயிருக்கும் தாமரை கட்சி கோஷ்டி பூசலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

உச்சத்துக்கு போயிருக்கும் தாமரை கட்சி கோஷ்டி பூசலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘தேனிக்காரர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் வந்துச்சாமே..’’ – ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரரை விட கிரி மாவட்டத்தின் மாஜி மீது செம கடுப்பில் இருக்காராம் தேனிக்காரரு. இது சமீபத்தில் அவர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில அப்பட்டமாக வெளிப்பட்டதாம். சேலத்துக்காரரு இலை கட்சியை ஆக்கிரமிச்சு ஜமீன்தார்களின் கட்சியாக மாத்திட்டாரு. அவருக்கிட்ட இருந்து கட்சியை மீட்பதுதான் என்னோட முதல்வேலை. இப்படி சொல்லி உரிமை மீட்பு கூட்டங்களை நடத்துறது தேனிக்காரரின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இந்தவகையில் சமீபத்தில் தேனிக்காரரு கலந்துகிட்ட கூட்டம், இலைகட்சியின் டெபுடி ஆர்கனைசரின் சொந்த ஊரில் நடந்ததாம். மூணெழுத்து தலைவர் கால மாஜியான இவருதான், தேனிக்காரரை தர்மயுத்தம் நடத்த தூண்டினவரு. இணைப்பு என்ற பெயரில் தனக்கான இலக்கை எட்டிய மாஜி, ஒரு கட்டத்தில் தேனிக்காரரை அம்போன்னு விட்டுட்டாராம். அப்புறமா சேலத்துக்காரரோட ரொம்பவே ஐக்கியமாயிட்டாராம். இதற்கான பின்னணி குறித்து தேனிக்காரரின் கொபசெவான பெங்களூர்காரரு, தேனிக்காரர் முன்னிலையில் கூட்டத்தில் அவ்வளவு ஹாட்டா பேசினாராம். கர்த்தரை காட்டிக்கொடுத்த யூதர்களோடு மாஜியை ஒப்பிட்டு பேசிய போது, தேனிக்காரரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் வந்து போச்சாம். தேனியின் ஒப்புதலோடுதான் பெங்களூர்காரரு அப்படி பேசினாராம். அது சரி, தனது ஆதாயத்திற்காக தேனியை தூண்டிவிட்ட மாஜி, இப்போ அவரை ஏறக்குறைய ஒத்தையில் நிக்க வச்சிட்டாரு. அந்த வலி சீக்கிரம் போகுமா என்ன என்று கொஸ்டீன் எழுப்புகின்றனர் அவரது அடிப்பொடிகள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போற இடமெல்லாம் பிரச்னையாவே இருக்குதாமே…’’ என்று நீட்டி முழக்கினார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல எலக்‌ஷன் நடக்கும்போது மட்டும் 3 எழுத்துக்காரர் ஒருத்தரு தலைகாட்டிட்டு போவாரு. இவரு 3 முறை வெயிலூர்ல நாடு ஆளும் மன்றத்தோட வேட்பாளராக போட்டி போட்டு தோல்வியை கண்டவர். தாமரை கட்சியில இதுக்கு காரணம் இலைதான்னு போட்டு உடைச்சாரு. அவங்க கிட்ட கொஞ்சம் அதிருப்தியை சம்பாதிச்சாரு. அப்புறம் எலக்‌ஷன் நடக்கும்போதுதான் தொகுதி பக்கம் எட்டிபார்க்குறாருன்னு குற்றச்சாட்டுகள் வந்ததால, சரி இருக்கவே இருக்குது நம்ம ஆஸ்பத்திரி. அதை வெச்சி முகாம் நடத்துவோம்னு முகாம் நடத்துனாரு. அதுலயும் இப்போ பிரச்னை தலைதூக்கி இருக்குது. வெயிலூர் மாவட்டத்துல ஒடுக்கமான பேர் ஊர் ஆட்சியில இருக்கற ஒரு மண்டபத்துல மருத்துவ முகாம் நடத்தியிருக்காங்க. அந்த முகாம்ல கொட்டாய்னு முடியுற ஏரியாவைச் சேர்ந்த ஒருத்தரு, செக்கப்புக்கு வந்திருக்காரு. அவரை செக்கப் செஞ்ச டாக்டரு, உங்களுக்கு கிட்னியில கல் இருக்குது, சென்னையில எங்க மருத்துவமனைக்கு வாங்க, ப்ரீயா ட்ரீட்மெண்ட் கொடுக்குறோம்னு சொல்லி, கொடுத்திருக்காங்க. ஆனா, அவருக்கு உடல்நிலை மோசமானதால, கவர்மென்ட் ஆஸ்பிடல்க்கு அனுப்பிட்டாங்களாம். அங்க அவரு இறந்து போயிருக்காரு. தவறான சிகிச்சையால இறந்துபோய்ட்டாருன்னு அங்க பிரச்னை ஆகியிருக்குது. இந்நிலையில், 3 எழுத்துக்காரரின் மற்றொரு மருத்துவ முகாம் இறந்து போனவரோட பக்கத்து ஏரியாவான கொத்தூர்னு முடியுற பகுதியில நடந்திருக்குது. அந்த முகாமுக்கு இறந்துபோனவரின் சொந்தக்காரங்க, ஊர் ஜனங்கனு எல்லாரும் போயி நியாயம் கேட்டிருக்காங்க. வாக்குவாதம் அதிகமாகி முகாமை அடிச்சு நொறுக்கிட்டாங்களாம். இப்படி., கட்சி தொடங்கி, கடைகோடி மக்கள் வரைக்கும் 3 எழுத்துக்காரருக்கு திரும்புன பக்கமெல்லாம் எதிர்ப்பாவே இருக்குதாம். இந்த முறையாவது கரைசேருவாரான்னு தெரியலையேன்னு கூட இருக்கறவங்களே பேசிக்கிறாங்களாம்’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியில் கோஷ்டி பூசல் உச்சத்துக்கு போயிருச்சாமே..’’ என அடுத்த கேள்வியைப்போட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரை கொண்ட மாவட்டத்தில் தாமரை கட்சியும், கோஷ்டி பூசலும் இயற்கையாகவே கூட்டணி அமைத்துள்ளதாம். ஆரம்பம் முதல் தற்போது வரை கோஷ்டி சண்டைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லையாம். அதுவும், கோட்டை பெயர் கொண்ட பகுதியில் கட்சியினரை மாவட்ட நிர்வாகிகள் கண்டுகொள்வதே இல்லையாம். எப்போது, எந்த நிர்வாகிகள் வந்தாலும், அதற்கு முன் இருந்த கட்சியினரை தள்ளிவைத்துவிட்டு, தங்களுக்கான ஒரு கூட்டத்தை மட்டுமே வைத்துக் கொள்கின்றனராம். அவர்களுக்கு மட்டுமே வேண்டியதை செய்து தருகிறார்களாம். அதிலும், ஆரம்பம் முதல் கட்சியில் இருக்கும் சாரணர் இயக்க புகழ் மன்னரின் ஆதரவாளர்களை இப்போது யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லையாம். அங்கு நடக்கும் கூட்டத்திற்கு கூட அவர்களை அழைப்பது இல்லையாம். முன்பு ஆதரவாளர்களுக்கு மட்டும் இருந்த நிலை போய், தற்போது சாரணர் இயக்க புகழ் மன்னருக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளதாம். இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் தாமரை கட்சியை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிடலாம் என அந்தக் கட்சியினரே புலம்புகின்றனராம்’’ என்று சிரித்தபடி பதிலளித்தார் விக்கியானந்தா.
‘‘நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாவட்ட தலைவரை மாற்ற நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மனுநீதி சோழன் மாவட்ட தாமரை கட்சி தலைவராக இருந்து வருபவர் மீது முதல் கட்ட, 2வது கட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்காங்க. இதற்கு முக்கிய காரணம் கட்சி நிர்வாகிகள, தொண்டர்கள அவரு மதிக்கிறதே கிடையாதாம்… இதில முக்கியமா கட்சி சம்பந்தமா, தனிப்பட்ட முறையில அவரது வீட்டுக்கு பார்க்க போற நிர்வாகிகள மாவட்ட தலைவரு ஒருமையில பேசுவதா நிர்வாகிகள் புலம்புறாங்க. இதுதொடர்பா நிர்வாகிகள், தலைமையிடத்துக்கு நேரில் சென்று மாநில தலைவரிடம், மாவட்ட தலைவர பத்தி புகாராவே கொடுத்திருக்காங்க. ஆனா மாநில தலைவரோ எந்த ரியாக்சனும் காட்டலயாம். இதனால பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாவட்ட தலைவரை மாத்தனும், இல்லாட்டி கட்சியில இருந்து கூண்டோட வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்னு போர்க்கொடி தூக்கியிருக்காங்களாம். இந்த தகவல் தெரிய வந்து மாவட்ட தலைவரு கடும் அப்செட்டில் இருக்காராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi