டெல்லி : உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்கிலும் ஜாமீன் என்பது எழுதப்படாத விதிமுறை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உபா சட்டத்தை கருப்புச் சட்டம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றங்களில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவை மீறுவதாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக இருந்தாலும் சட்டத்தின்படி ஜாமீன் வழக்கை பரிசீலிப்பது நீதிமன்றங்களின் கடமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு என்பது உபா உள்ளிட்ட சிறப்பு சட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் சுட்டிக் காட்டினர். உபா வழக்குகளிலும் சட்ட விதிப்படி ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.