துபாய்: மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக அங்கு தங்கி உள்ளனர். ஆண்டுதோறும் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்தியர்கள் பொது மன்னிப்பு திட்டத்தின் பலன்களை பெற அங்குள்ள இந்திய தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
“இதற்காக அங்குள்ள இந்திய துணை தூதரகத்தில் கவுன்டர்கள் திறக்கப்பட்டு இன்று முதல் செயல்பட தொடங்கும். ஐக்கிய அரபு எமிரேட்சில் சட்டவிரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் இந்திய துணை தூதரகத்தில் சென்று முறையாக விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் அபராதம் ரத்து செய்யப்படும். அல்லது முறைப்படி அவர்கள் வௌியேற அனுமதி அளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.