இங்கிலாந்து அணிக்கு எதிரான 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் 14 வயதே ஆன இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 100 ரன்கள் விளாசி கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இதையடுத்து 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பிடித்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, முதல் போட்டியில் 48 ரன்களும், 2வது போட்டியில் 45 ரன்களும், 3வது போட்டியில் 86 ரன்களும் எடுத்தார்.
இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 52 பந்துகளில் சதம் அடித்து, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த காம்ராம் குலாம் என்ற வீரர் 53 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இப்போட்டியில் சூர்யவன்ஷி 78 பந்துகளில் 143 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில், 13 பவுண்டர்களும், 10 சிக்சர்களும் அடங்கும்.