நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசார், நகரில் விதிமுறைகளை மீறி டூ வீலர்களை ஓட்டிச் செல்பவர்களிடம், கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மெயின்ரோட்டில் நின்று கொண்டு, 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகிறார்கள். அப்போது, அந்த வழியாக வரும் இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனம் சேர்ந்த பின்பு, வாகன ஓட்டுனர்களிடம், ‘ஏதாவது இருக்கிறத கொடுத்துட்டு போ’ என்று ஏட்டு ஒருவர் கூறுகிறார்.
அதனை புரிந்து கொண்ட வாகன ஓட்டுனர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை (ரூ.100 முதல் ரூ.200 வரை) திணித்து விட்டு, அங்கிருந்து வாகனங்களை கிளப்பிக் கொண்டு வேகமாக செல்கிறார்கள். இதை பாதிக்கப்பட்ட ஒருவர் போலீசுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.