சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 பிரதிநிதிகளை அனுமதி வேண்டும் என ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மே.29ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி மட்டும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பேரவைக்கு இரு பிரதிநிதிகள் அனுமதிக்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பட்டு வரும் 18க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஏஐடியுசி சங்கங்கள் உள்ளன.
இதன் கூட்டமைப்பாகவும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதிநிதியாகவும், மத்திய தொழிற்சங்கம் ஏஐடியுசி அரசு போக்குவரத்து தொடங்கிய காலத்தில் இருந்து அனைத்து ஊதிய ஒப்பந்தங்களிலும் பங்கேற்று வருகிறது. அதனடிப்படையில், பதிவு பெற்ற சங்கங்கள் எனில் ஏஐடியுசி-யில் இருந்து மட்டும் 18 பிரதிநிதிகளை அழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும், எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது கலந்து பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.