ஜெய்ப்பூர்: தற்போது மருத்துவ படிப்பு படித்துவரும் நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இருவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் ஒரே நிறத்திலான சட்டை அணிந்திருந்ததால் சி்க்கிக்கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 5 அன்று நீட் தேர்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜித் கோரா (ரோல் எண்: 390361794) என்ற மாணவர் 720க்கு 578 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய தரவரிசையில் 13718வது இடத்தை பெற்று பரத்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அவரது தேர்வு நுழைவு அட்டையில் நீல நிறத்திலான சட்டை அணிந்த புகைப்படம் இருந்தது. தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வெளியான நீட் தேர்வு முடிவில், அஜித் கோராவின் உறவினரான சச்சின் கோரா (ரோல் எண்: 3901001410) என்பவர் 720க்கு 667 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய தரவரிசையில் 1443வது இடத்தை பிடித்து ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், இருவரின் தேர்வு நுழைவு அட்டைகளிலும் ஒரே நபரின் புகைப்படம் (நீல நிறத்திலான சட்டை) இருந்தது கண்டறியப்பட்டது.
இவர்களின் தேர்வு மோசடி வேலையை அறிந்த ராஜஸ்தானை சேர்ந்த பின்வாராம் கவுரா என்பவர் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வுகளில், ராஜஸ்தானைச் சேர்ந்த உறவினர்களான அஜித் கோரா மற்றும் சச்சின் கோரா ஆகிய இருவரும் மோசடி செய்தது உறுதியானது.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில், சச்சின் கோராவுக்கு பதிலாக அஜித் தேர்வு எழுதியுள்ளார். அந்த தேர்வில் சச்சின் கோரா தேர்ச்சியடைந்ததாக தேர்வு முடிவு வெளியானதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. இவ்வழக்கு ஜெய்ப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து இருவர் மீதும் தேர்வு மோசடி, போலி ஆவணங்கள், குற்றச் சதி மற்றும் ராஜஸ்தான் தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சச்சின் கோராவை மருத்துவக்கல்லூரி விடுதியிலிருந்து அழைத்து வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரளித்தவரின் வழக்கறிஞர் ஜகதீஷ் குல்தீப் அளித்த பேட்டியில், ‘நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிக்கு பின்னால் பெரிய மோசடி கும்பல் இருக்கலாம் என்பதால், இவ்வழக்கை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார். ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வடமாநிலங்களில் பல முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது ராஜஸ்தானில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.