மதுரை: மதுரை அருகே காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை இன்று காலை போலீசார் கைதுசெய்தனர். காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரை மிரட்டும் வகையில் பேசிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் போராளி பிரபாகரன்(29). இவரை, வாலிபர் கொலை வழக்கில் திண்டுக்கல் போலீசார் தேடி வந்ததாக கூறப்படுகிறது. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் மது போதையில் தனது நண்பருடன் வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் வந்தார்.
பின்னர், இருவரும் அங்கு பணியில் இருந்த ஏட்டு பால்பாண்டியை அறைக்குள் தள்ளி பூட்டி விட்டு, டேபிள் மேல் இருந்த அவரது செல்போன், வாக்கி டாக்கி, கம்ப்யூட்டர், டிவி, உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று காலை காவல் நிலையம் வந்த சிலர், அறைக்குள் சிக்கியிருந்த ஏட்டு பால்பாண்டியை மீட்டனர். மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்பி அரவிந்த் கூறும்போது, ‘‘பிரபாகரனின் தந்தை முத்துவேலை திண்டுக்கல் மாவட்ட போலீசார், வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றதாக பிரபாகரன் தவறாக கருதியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர், நண்பருடன் வந்து காவல் நிலையத்தில் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது என்றார். தப்பியோடிய இருவரையும் பிடிக்க உசிலம்பட்டி உட்கோட்ட டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட போவதாகக் கூறி, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு வந்தார்.
என்.முத்துலிங்காபுரம் பகுதியில் வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சம்பவம் இடத்திற்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டி.கல்லுப்பட்டி போலீசார் ஆர்.பி.உதயகுமார், உள்ளிட்ட 50 பேரை கைது செய்து டி.கல்லுப்பட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, ஆர்.பி.உதயகுமாரை தடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர், `தடை இருக்கா; என் தொகுதிக்குள் நான் வருவதை தடுக்க நீ யார்? மரியாதை கெட்டுப்போகும்’ என விரலை நீட்டி மிரட்டும் வகையில் பேசினார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், காவல் நிலையம் சூறையாடப்பட்டது தொடர்பாக, விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியில் பிரபாகரன், அவரது நண்பர் அய்யனார் ஆகிய இருவரையும் இன்று காலை அந்த மாவட்ட போலீசார் பிடித்து, தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.