பெரம்பூர்: வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் கால்வாய் மூடி உடைந்து ஏற்பட்ட விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். சென்னை வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சில இடங்களில் மேன்ஹோல் மூடி உடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேற்கண்ட பகுதியில் கால்வாய் மேன்ஹோல் மூடி உடைந்த இடத்தில், அதன் மேல் கற்கள் மற்றும் செடிகளை போட்டு வைத்திருந்துள்ளனர். இதை கவனிக்காமல் அதன் மீது மொபட் ஏறி இறங்கியதில், மாற்றுத்திறனாளி பெண் மற்றும் உடன் சென்ற பெண் ஆகிய இருவரும் தடுமாறி, அருகில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் அவர்கள் விழுந்ததால், அதிலிருந்த கம்பி குத்தி இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொத்தால்சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (45) மற்றும் அவரது உறவினர் கலைவாணி (30) என தெரியவந்தது. இருவருக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொத்தால்சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.