சென்னை: வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அதேபோல குஜராத் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் காற்று ஈர்க்கப்படுவதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்தது. அதனால் அங்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டது. மேலும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேலும், இன்றும் நீலகிரி மாவட்டத்தி்ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி இருக்கும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். 19ம் தேதி வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் ஒரு சில பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.