பெரம்பூர்: வியாசர்பாடியில் 58 சவரன் நகை திருடுபோன விவகாரத்தில் மகாராஷ்டிராவிற்கு சென்று 150 கிராம் நகைகளை வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக, மேலும் 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (51), தி.நகரில் பைனான்ஸ் அட்வைசர் அலுவலகத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி, தனியார் பள்ளியில் ஆசிரியை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம்தேதி காலை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 58 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில், வியாசர்பாடி குற்றப்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்து, கடந்த மாதம் 20ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த மங்கேஷ் நந்தகுமார் (27), சந்திரகாந்த் ஆனந்த் மானே (32), ஸ்ரீகாந்த் ஆனந்த் மானே (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த அணில் ராவ் சாகிப் படே (36), கவுரவ் பஞ்சனா மோகந்தி (38) ஆகியோரிடம் நகைகளை கொடுத்து உருக்கியதும், இதற்காக ரூ.14 லட்சம் பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திருடுபோன நகைகளை மீட்பதற்காக கடந்த 5ம்தேதி சசிகாந்த் மானே, அணில் ராவ் சாகிப் படே ஆகிய 2 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில், அவர்களை மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அழைத்துச்சென்று நகைகளை எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, 2 பேரின் வீடுகளில் இருந்து சுமார் 150 கிராம் தங்க நகைகளை மீட்டனர்.
இவர்கள், தங்கத்தை நகைகளாக வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நகைகளை உருக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 150 கிராம் தங்க நகைகளை மீட்ட போலீசார், 2 பேரையும் நேற்று முன்தினம் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், சசிகாந்த் மானே மற்றும் அணில் ராவ் சாகிப் படே ஆகிய 2 பேரையும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.