புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஸ்லீப்பர் செல் என கருதப்படும் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று மும்பை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த 2023ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட வெடிப்பொருள் சாதனங்கள் தயாரித்தல் மற்றும் சோதனை செய்த வழக்கில் அப்துல்லா பயாஸ் ஷேக் மற்றும் தல்ஹா கான் ஆகிய இருவரும் தலைமறைவாகினார்கள். இது இந்தியா முழுவதும் தீவிரவாத செயல்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ள ஐஎஸ்செயல்பாட்டாளர்களின் ஸ்லீப்பர் செல் சம்பந்தப்பட்ட குற்றச்சதி தொடர்பான வழக்காகும்.
இவர்களை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்களும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் இருந்து இந்தியா திரும்பிய இருவரும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். பின்னர் இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.