லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு வேலையை பார்த்த டெல்லியை சேர்ந்த இருவரை உத்தரபிரதேச அரசின் தீவிரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்தது. டெல்லியின் சீலம்பூரைச் சேர்ந்த முகமது ஹரூன் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த துபைல் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பில் இருந்ததாக உளவுத் துறை மற்றும் உத்தரபிரதேச அரசின் தீவிரவாத எதிர்ப்பு படைக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தன. இவர்கள் இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு தகவல்களை, குறிப்பாக பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவரங்களை, ஆன்லைனில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதையடுத்து முகமது ஹரூன் துபைல் ஆகியோர் நொய்டா மற்றும் வாரணாசியில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட முகமது ஹரூன், பழைய பொருட்கள் வியாபாரியாக இருந்தார். பாகிஸ்தானின் முஸம்மில் ஹுசைன் என்ற நபருடன் தொடர்பில் இருந்தார், அவரிடம் பணம் பெற்று இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு உதவியுள்ளார். அதேபோல் துபைல் என்பவர், 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தொலைபேசி எண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.
ராஜ்காட், கியான்வாபி, ஜமா மஸ்ஜித், ரெட் ஃபோர்ட் போன்ற முக்கிய இடங்களின் புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இவர் ஒரு பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். ‘கஸ்வா-ஏ-ஹிந்த்’ மற்றும் பாபர் மஸ்ஜித் இடிப்பு பழிவாங்கல் பற்றிய பிரசாரங்களை பரப்பியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இவர்களின் பாகிஸ்தான் உளவு வளையம் விரிந்து கொண்டே செல்வதால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினர்.