சென்னை: தொடர் கனமழையால் சோலையார் அணை 160 அடியை எட்டி உள்ளது இதனால் தாழ்வானப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான சின்னாக்கல்லாறு, சோலையாறு, கத்தி எஸ்டேட் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி வால்பாறை பகுதிகளில் பள்ளிகள் மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். மேலும் இந்த கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வால்பாறை அருகே உள்ள தமிழகத்தின் மிகப்பெரிய 2வது அணையாக உள்ள சோலையாறு அணைக்கு நீர்வரத்து சுமார் 5 ஆயிரம் கன அடி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டி உள்ளது.
அணையின் முழு கொள்ளளவானது 160 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீரை சேடல் டாம் வழியாக உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் பாதுகாப்பது நிலை கருதி எந்த நேரத்திலும்மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் பொதுப்பணி துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.