*போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு: போலீசார் அதிரடி நடவடிக்கை
திருப்பூர் : திருப்பூர் காமராஜ் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடாது, பேருந்து நிலையத்திற்குள் மற்றும் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தம் செய்யக்கூடாது என போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனை, கவனத்தில் கொள்ளாமல் பேருந்து நிலைய முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு நேற்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். உரிமையாளர்கள் இல்லாமல் இருந்த வாகனங்களின் மீது அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியது மட்டுமல்லாது 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் சக்கரங்களுக்கு பூட்டு போட்டு சென்றனர்.
பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் மட்டுமல்லாது முன் பகுதியில் மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால், நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டனர்.
மேலும், இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதனால், பேருந்து நிலையத்திற்குள் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தபடுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி இருசக்கர வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் வருவதால் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையத்திற்குள்ளும், வெளிபகுதியிலும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே, பேருந்து நிலையத்திற்குள் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். மேலும், பேருந்து நிலையத்தின் வெளிபுறத்தில் நிறுத்தி விட்டு செல்லும் வாகனங்களுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து இதேபோல் மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்தால் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.