*தப்பியோடிய டிரைவருக்கு வலை
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாகாலம்மன் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் வெற்றிவேல் (17), அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் கார்த்திக்(18). இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்காக, இருவரும் வீட்டில் இருந்து நல்லம்பள்ளியை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது, எதிரே பொம்மிடி நோக்கி எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது, டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வெற்றிவேல், கார்த்திக் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் தப்பியோடி விட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.