Wednesday, December 6, 2023
Home » இரண்டு இதயங்களும் இயன்முறை மருத்துவமும்!

இரண்டு இதயங்களும் இயன்முறை மருத்துவமும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

கருதரித்து குழந்தையை சுமக்கும் பெண்களை நோயாளிகளாக எண்ணி அவர்களுக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை எல்லா பக்கத்திலும் இருந்து வழங்குவார்கள். இதனால் கர்ப்பிணிகள் பயம் கொள்வதோடு, எது செய்ய வேண்டும், வேண்டாம் என்ற குழப்பத்துடனும் இருப்பார்கள். அதில் ஒன்று உடற்பயிற்சிகள் செய்யலாமா, வேண்டாமா? என்பது.
அத்தகைய உடற்பயிற்சிகள் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

மூன்று கட்டங்கள்…

பத்து மாத கர்ப்பத்தை மும்மூன்று கட்டங்களாக மருத்துவத்தில் பிரித்து சொல்வர்.

1 – 3 மாதங்கள் – முதல் மும்மாதம் (Trimester).
4 – 6 மாதங்கள் – இரண்டாம் மும்மாதம்.

7 – 9 மாதங்கள் – மூன்றாம் மும்மாதம் என 9 மாதத்தை கடந்தாலே எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழலாம் என்பதால் பத்தாவது மாதத்தை கணக்கில்
கொள்ள வேண்டியதில்லை.

இயன்முறை மருத்துவம்…

கருத்தரித்தவுடன் தங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்து சிசு நன்றாக வளர்வதை உறுதி செய்தவுடன் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை
அணுகுதல் அவசியம்.

ஒவ்வொரு கர்ப்பிணியின் உடலும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதாலும், கர்ப்ப காலத்திற்கு முன் இருந்த ஆரோக்கியம் (Fitness Level) என்ன என்பதனை கருத்தில் கொண்டு முழு தசைகளையும் பரிசோதனை செய்வர். பின் அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

உடற்பயிற்சி வகைகள்

1. இதய நுரையீரல் தாங்கும் திறன்

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனம், ஏரோபிக்ஸ், ஸூம்பா (zumba) என தனக்குப் பிடித்த ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
எந்தவித சிக்கல்களும் இல்லாத கர்ப்பிணிகள் தினமும் முப்பது முதல் நாற்பது நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம்.

மூச்சுப் பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் முறையாக பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பர். அதனையும் தொடர்ந்து செய்து வருவது அவசியம்.

2. தசை தளர்வு பயிற்சிகள்

அதிக எடை கூடுவதால் எளிதில் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதி தசைகள் இறுக்கமாக (Tightness) ஆகும் என்பதால், தசை தளர்வு பயிற்சிகளை ஒவ்வொரு மும்மாதத்திற்கு ஏற்ப கற்றுக்கொடுப்பர்.

3. தசை வலிமை பயிற்சிகள்

தசைகள் ஒவ்வொரு மாதமும் பலவீனமாக மாறும். இதனால் பிரசவத்தின் பின்பும் கூட உடல் மூட்டுகளில் வலி, முதுகு வலி என அவதியுற வேண்டியிருக்கும் என்பதால், முதலில் இருந்தே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களின் தசை வலிமைக்கேற்ப உடற்பயிற்சி வழங்குவர்.

உடற்பயிற்சியால் வரும் நன்மைகள்…

*உடல் மற்றும் மனம் உற்சாகமாக இயங்கும்.

*சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் தசைகளுக்கு பலத்தினைக் கொடுக்கும்.

*கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களால் ஏற்படும் சிறு உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்களை, அறிகுறிகளை தீர்க்க உதவும். உதாரணமாக, மனஅழுத்தம், மன மாறுதல்கள் (Mood swings), காலையில் வரும் குமட்டல், தூக்கமின்மை, படபடப்பு, உடல் அயற்சி, கால் கை தசைகள் இழுப்பது (Cramps), கால் கைகளில் ஏற்படும் வீக்கம், உடற்பருமன், கர்ப்ப கால நீரிழிவு நோய், மாறிய உடல் தோரணை (posture) போன்றவற்றை பத்து மாதமும் தவிர்க்கலாம்.

*இடுப்பு மற்றும் கால் தசைகளை உறுதியாக மாற்றுவதன் மூலம் பிரசவம் ஆகும் நேரம் வரை ஒத்துழைக்க இயலும்.

*வயிறு மற்றும் முதுகுத் தண்டுவடத்தை சுற்றியுள்ள தசைகளே ‘கோர்’ தசைகள் எனப்படும். குழந்தை வளர வளர இத்தசைகள் பலவீனம் ஆகும் என்பதால், முதல் மாதம் முதலே உடற்பயிற்சி செய்து வந்தால் கர்ப்ப காலத்திலும் முதுகு வலி ஏற்படாது. குழந்தை பிறந்த பின்பும் முதுகு வலி ஏற்படாது.

*தொடர் உடற்பயிற்சிகள் மூலம் தசைகளின் முழு அளவை சீராக வைத்திருக்க முடியும் என்பதால், தசைகள் முழு தளர்ச்சியுடன் (Flexibility) இயங்கும். இதனால் குழந்தை பிறந்த பின் இயல்பு வாழ்வுக்கு சீக்கிரமாக திரும்பவும், வலியினை தாங்கும் திறன் மேம்படவும் உதவும்.

*இதய நுரையீரல் தாங்கும் திறன் (Endurance) பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது மூச்சு வாங்குதல் இருக்காது. மேலும் சுகப்பிரசவத்தின் போது 20 மணி நேர வலியாக இருந்தாலும் ஒத்துழைத்து குழந்தையினை வெளியே கொண்டுவர இயலும்.

*மார்பகங்கள் முதல் மாதம் முதலே வளர ஆரம்பிக்கும் என்பதால், அதன் எடை கூடக்கூட கழுத்து வலி ஏற்படும். இதனால் அதற்கான உடற்பயிற்சிகளை செய்தால் கழுத்து வலியை தவிர்க்கலாம்.

செய்யக்கூடாதவர்கள்…

* கர்ப்பப்பை ஆரம்பம் முதலே பலவீனமாய் இருப்பவர்கள்.

* கர்ப்பப்பையில் ஏதேனும் உள்காயம் இருப்பவர்கள்.

* குறைமாத பிரசவம் நிகழலாம் என முன்கூட்டியே மருத்துவர்களால் கணிக்கப்பட்டவர்கள்.

* மாதவிடாய் போன்று சிறு ரத்தக் கசிவு உள்ளவர்கள்.

* நஞ்சுக்கொடி கீழே இறங்கி கருப்பை வாயை அடைத்துக் கொண்டவர்கள்.

* அதீத உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள்.

* கர்ப்பப்பை வாய் சிறிதாகி திறந்து கொண்டவர்கள்.

* கருவில் சிசு அந்தந்த மாதங்களுக்கு ஏற்ப எடை கூடாமல் இருப்பவர்கள்.

* இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகள்.

* அதிக வயதினைக் கடந்து கருத்தரித்த பெண்கள்.

* முன்பு ஒன்றுக்கும் அதிகமாக கருக்களைதல் (Miscarriage) ஏற்பட்டவர்கள்.

* அதிக ரத்த சோகை உள்ளவர்கள்.

* போதிய ஊட்டச்சத்து இல்லாதவர்கள்.மேல் சொன்னவர்கள் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. ஆனால், ஆரம்ப நிலை பயிற்சிகள், பிரத்யேகமாக இவர்களுக்கென்றே பரிந்துரைத்த பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என ஒரு சில மாறுதல்களுடனும் உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பர்.

எச்சரிக்கை துளிகள்…

* இயன்முறை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உடற்பயிற்சிகள் செய்வதால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். மேலும் முதல்முறை அவர் மேற்பார்வையில் உடற்பயிற்சிகளை செய்து பழகிக்கொண்டு பின் வீட்டில் அதேபோல பயிற்சிகள் செய்யலாம்.

* படுத்திருந்தவாறு உடற்பயிற்சிகள் செய்யும்போது நேரே உடல் மேலே பார்த்தவாறு அதிக நேரம் செய்தால் குழந்தைக்கு ரத்த ஓட்டம் பாதிக்கலாம் என்பதால், மூன்று நிமிடங்களுக்கு மேல் படுத்திருக்கவோ, ஓய்வெடுக்கவோ வேண்டாம்.

* உடற்பயிற்சிகளை செய்யும்போது நம்மை அறியாமல் மூச்சினை அடக்க முயல்வோம். எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

* படுத்திருக்கும் நிலையில் உடற்பயிற்சிகள் செய்யும் போது ஒரு நிலையில் இருந்து இன்னொரு பக்கம் திரும்புவதற்கு
நிதானமாக திரும்பவும், எழுந்திருக்கவும் வேண்டும்.

* போதிய நீர்ச்சத்து உடலில் இருக்க வேண்டும் என்பதால், உடற்பயிற்சியின் போது அவ்வப்போது குறைவான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி முன் செய்ய வேண்டிய ‘வார்ம் அப்’ மற்றும் பின் செய்ய வேண்டிய ‘கூல்டவுன்’ பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.

* இயன்முறை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அதிக பளு தூக்குதல், அதிக எண்ணிக்கையில் உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* மூச்சிரைப்பது, நெஞ்சு வலி, மயக்கம், கருப்பையிலிருந்து ரத்தக் கசிவு, அடிவயிறு வலி, குழந்தையின் அசைவு குறைந்தவாறு தோன்றினால் உடற்பயிற்சி செய்வதனை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மொத்தத்தில், இரண்டு இதயமும் இரண்டு இதயத் துடிப்பும் கொண்டு நாம் பத்து மாதம் மட்டுமே மற்றவர்களோடு வேறுபட்டு, நமக்கான புதிய இரண்டாம் உடலில் இருப்போம் என்பதால், பயந்துபோய் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருக்க வேண்டியது இல்லை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வோம்.

சுகப்பிரசவம் ஆகுமா?

உடற்பயிற்சி செய்வதனால் கட்டாயம் சுகப்பிரசவம் ஆகிவிடும் எனப் பல கர்ப்பிணிகள் நினைக்கின்றனர். ஆனால், ஹார்மோன்கள், இடுப்பு எலும்பு மூட்டுகள், குழந்தையின் தலை திரும்பி இருத்தல், குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒத்துழைத்து வெளியே வருதல் என்று பல விஷயங்கள் சுகப்பிரசவத்தினை தீர்மானிக்கும் என்பதால், உடற்பயிற்சியை மட்டுமே 100 சதவிகிதம் நம்பி இருக்கக் கூடாது. மேலும், கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்தின் போதும், குழந்தை பிறந்த பின்பும் நம்மை ஆரோக்கியமாக சிரமம் இல்லாமல் இயங்க வைப்பது உடற்பயிற்சிகள் மட்டும்தான் என்பதால், சுகப்பிரசவம் என்பது ஒரு பலன் மட்டும் தான் என்ற புரிதல் இருப்பது அவசியம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?