எந்த ஒரு புடவை என்றாலும், அதற்கு எப்படி தங்களின் பிளவுஸ்களை வடிவமைக்கலாம் என்று யோசிக்கிறார்கள் இன்றைய பெண்கள். அப்படி இருக்கும் போது மணப்பெண்ணுடைய திருமண பிளவுசிற்காகவே ஸ்பெஷல் டிசைனர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட டிசைனர்களில் ஒருவர்தான் சுமதி. இவர் மணப்பெண்ணிற்கான பிளவுஸ்களை மட்டுமே வடிவமைத்து வருகிறார். இவரைப்போல் பலர் இருக்கிறார்கள். ஆனால் எந்தவித கிராண்ட் டிசைனாக இருந்தாலும் அதனை இரண்டே நாட்களில் டெலிவரி செய்வதுதான் இவரின் ஸ்பெஷாலிட்டியே. ஐ.டி வேலையை துறந்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர் ஆரம்பித்ததுதான் ‘யுடி’ டிசைனர் பிளவுஸ்.
‘‘2015ல் யுடி டிசைனர் ஹவுஸ் என்ற பெயரில்தான் முதன் முதலில் என்னுடைய டிசைனர் கடையினை ஆரம்பிச்சேன். நான் ஐ.டி துறையில் ஐந்து வருட காலம் வேலை பார்த்து வந்தேன். ஆனால் என்னுடைய உள் மனதில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்ேட இருந்தது. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போதுதான், டிசைனிங் தொழிலில் ஈடுபடலாம்ன்னு முடிவு செய்தேன்.
அதற்கு முக்கிய காரணம் இதற்கான முதலீடு குறைவு. உணவகம் அல்லது வேறு தொழிலில் ஈடுபட்டால், அதற்கான முதலீடும் அதிகம். மேலும் வேலையாட்களையும் நான் நியமிக்க வேண்டும். ஆனால் ஒரு ஸ்டார்டப் நிறுவனமாக ஆரம்பிக்கும் போது இதற்கு நான் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தைக் கொண்டு, இரண்டு டெய்லருடன் என் வீட்டிலேயே வைத்து ஆரம்பித்தேன். முதலில் சல்வார், பிளவுஸ், ஸ்கர்ட் என அனைத்து விதமான உடைகளையும் நாங்க தைத்துக் கொடுத்து வந்தோம்.
நான் ஆரம்பித்த போது எனக்கு இந்த துறையைப் பற்றி எதுவுமே தெரியாது. எம்பிராய்டரி கூட போட தெரியாது. பொதுவாகவே நான் நன்றாக உடையினை தேர்வு செய்து அணிவேன். உடைகளையும் நன்கு மேட்சிங் செய்வேன். இந்த குணம் பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் இருக்கும். அந்த அடிப்படையில்தான் நான் இதை துவங்கினேன். நான் எம்பிராய்டரி மற்றும் டெய்லரிங் குறித்து படிச்சது எல்லாம் கிடையாது. என்னுடைய டெய்லரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். ஒரு கட்டிங் அவர் செய்யும் ேபாது, எதற்காக செய்றாங்கன்னு கேட்டு தெரிந்து கொள்வேன். அப்படித்தான் படிப்படியாக இந்த துறை பற்றி தெரிந்து கொண்டேன்.
ஒரு ஆர்வத்தில் நானும் கடையை ஆரம்பிச்சிட்டேன். ஆனால் எனக்கு வாடிக்கையாளர்கள் முதலில் யாருமே வரல. புது பிராண்ட் என்பதால் எல்லோருக்கும் சரியாக தைப்பார்களான்னு நம்பிக்கை இருக்காது. அதனால் ஆரம்ப காலத்தில் என்னுடைய வேலை மேல் நம்பிக்கை ஏற்படுத்த கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதன் பிறகு நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும் வாய் வார்த்தையாகதான் படிப்படியாக எங்களைப் பற்றி தெரிய வந்தது. வாடிக்கையாளர்களும் வர ஆரம்பிச்சாங்க. வீட்டில் இருந்து திருவான்மியூர் அருகே ஒரு இடம் எடுத்து செயல்பட ஆரம்பிச்சேன்’’ என்றவர் தற்போது மணப்பெண் டிசைனர் பிளவுசில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
‘‘ஆரம்பத்தில் எல்லா உடைகளும் தான் டிசைன் செய்து கொடுத்து வந்தேன். 2019 முதல் எங்களின் கடை பெயரை யுடி டிசைனர் பிளவுஸ்ன்னு மாத்திட்டோம். காரணம், மற்ற உடைகளை விட மணப்பெண்ணின் பிளவுசிற்கான மார்க்கெட் நன்றாக இருந்தது. அதனால் ஒரு பொருளை மட்டும் பிரத்யேகமாக செய்யலாம்ன்னு முடிவு செய்துதான் இதில் முழு மூச்சாக இறங்கினேன். பலரும் நீ ரிஸ்க் எடுக்கிறேன்னு சொன்னாங்க. ஆனால் என்னுடைய இலக்கு இதுதான்னு முடிவு செய்திட்டேன்.
அதனால் ரிஸ்க் எடுத்தால் தான் சரியா இருக்கும்ன்னு தோணுச்சு. மேலும் அந்த சமயத்தில் இது போல் மணப்பெண்ணின் பிளவுஸ்களை எம்பிராய்டரி செய்வது, ஆரி வேலைப்பாடுகள் செய்பவர்கள் பெரிய அளவில் யாருமே இல்லை. அது எனக்கு பிளசாக மாறியது. பிசினசில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முடிந்தது. நான் அந்த முடிவு எடுத்த போது என் வாடிக்கையாளர்கள் பலர் வருத்தப்பட்டாங்க. அதற்காக நான் செய்து தருகிறேன்னு சொல்லி அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை’’ என்றவரின் யு.எஸ்.பி இரண்டே நாட்களில் மணப்பெண்ணிற்கான டிசைனர் பிளவுசினை தைத்துக் கொடுப்பதுதான்.
‘‘பொதுவாகவே மணப்பெண்ணிற்கான பிளவுஸ் தைக்க எல்லா இடங்களிலும் ஒரு மாசம் எடுத்துப்பாங்க. எங்களுக்கு எம்பிராய்டரி செய்யவே அவ்வளவு காலம் தேவைப் படவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் எல்லாரும் வாடிக்கையாளரை காக்க வைக்கிறாங்கன்னு யோசிக்க வைத்தது. அப்பதான் ஒரு கிராண்ட் மணப்பெண்ணின் பிளவுசினை அதிகபட்சம் எவ்வளவு நாட்களில் கொடுக்க முடியும்ன்னு நான் என் டீமுடன் சேர்ந்து கலந்து ஆலோசித்தேன். அதிகமாக நெருக்கடியோடு செய்தாலும், இரண்டு நாட்களுக்கு மேல் ஆகாது என்று தெரிந்து கொண்டோம். அதையே எங்களின் யு.எஸ்.பி யாக மாற்றினோம்.
அந்த சமயத்தில் பலரும் இது போல டிசைனிங் தொழிலில் இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. போட்டி நிறைந்த தொழிலில் நாங்க தனித்து இருக்க விரும்பினோம். அதற்கு என்னுடைய டீம் தான் முக்கிய காரணம்ன்னு நான் சொல்ேவன். ஒரு ஆர்டர் எடுத்த அடுத்த நிமிடம், அதற்கான டிசைன் மற்றும் எம்பிராய்டரி எல்லாம் என்ன என்று அடுத்தடுத்து செய்ய ஆரம்பிச்சிடுவோம். எல்லாம் சரியான டிராக்கில் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்போம்.
அப்பதான் குழப்பம் இல்லாமல் டெலிவரி செய்ய முடியும். நாங்க மற்ற உடைகளை தவிர்த்ததற்கு காரணமும் இது தான். ஒரு பிளவுசிற்கு நாங்க நேரம் செலவழிக்கும் போது எங்களால் மற்ற உடைகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. என்னிடம் இருப்பது தனிப்பட்ட யூனிட் என்பதால், நான் வெளியே தைக்க அவுட் சோர்சிங் செய்வதில்லை. சரியா தைப்பார்களா, குறிப்பிட்ட நேரத்தில் கொடுப்பார்களான்னு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். அதில் எனக்கு விருப்பமும் இல்லை.
நாங்க மணப்பெண்ணின் பிரத்யேக பிளவுஸ் டிசைனர் என்பதால், பலர் நெருக்கடியான நேரத்தில் வந்து கொடுப்பார்கள். அவர்களுக்கும் நாங்க தைத்து கொடுத்திருக்கிறோம். அதே சமயம் முகூர்த்த நேரத்தில் நிறைய ஆர்டர் குவியும். அந்த நேரத்தில் எங்களால் கொடுக்க முடியும் என்று உறுதி இருக்கும் வரை தான் ஆர்டர்களை எடுப்போம். அதையும் மீறி வந்தால், ஆர்டர் க்ளோசுன்னு சொல்லிடுவோம்.
பலர் ரொம்பவே மனவருத்தத்துடன் திரும்பி சென்றிருக்காங்க. ஆனால் பொய்யான வாக்குறுதி கொடுத்து நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் எங்களின் சக்திக்கு ஏற்பதான் நாங்க ஆர்டர்களை எடுப்போம். காரணம், இது சாதாரண கட்டிங் மற்றும் தையல் வேலைப்பாடு கிடையாது. மிகவும் நுணுக்கமாக செய்யக்கூடியது. அதில் நேர்த்தி என்பது மிகவும் முக்கியம். நாங்க தைப்பது அந்த மணப்பெண்ணின் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கக்கூடியது. அதில் சின்னத் தவறுகூட ஏற்படக்கூடாதுன்னு உறுதியா இருக்கிறோம்’’ என்றவரிடம் ஒரு பிளவுசிற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்றதற்கு…
‘‘என்னைக் கேட்டா, ஒரு பிளவுசின் விலையினை எதை வச்சு நிர்ணயம் செய்றாங்க. அதன் வேலைப்பாடா? அதை தைப்பவர்கள் கொண்டா? அதில் பயன்படுத்தப்படும் பொருட்களா? துணியின் ரகமா? நாங்க கொடுக்கும் சர்வீசா?
ேநர்த்தியா? இப்படி தனித்தனியாக காசு போட முடியாது. இவை அனைத்தும் ஒன்று சேரும் போது, அதில் இருந்து வெளியாகும் அந்த பொருளின் மதிப்பிற்குதான் நாங்க விலை நிர்ணயிக்கிறோம். எங்களின் ஒவ்வொரு பிளவுசில் பயன்படுத்தப்படும் நூல், மணி, துணி உட்பட அனைத்திற்குள் நாங்க அதன் தரத்தினை ஆய்வு செய்வோம். அதன் பிறகுதான் அதனை பயன்படுத்துவோம். இதே டிசைனை ஒரு சின்ன தெருவில் உள்ள கடைகளிலும் செய்வாங்க.
ஆனால் அவர்களின் தரமும் இதுவும் ஒன்றாக இருக்குமா என்பதுதான் என் கேள்வி. தரமான பொருளின் மதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் நாங்க பிளவுசில் வரக்கூடிய டாசில்களையும் பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்து தான் தருகிறோம். ஆரம்பத்தில் நானும் கடைகளில் விற்கும் டாசில்களை தான் பயன்படுத்தினேன். அதில் எனக்கு பெரிய அளவில் திருப்தி ஏற்படவே இல்லை.
அப்போது தான் இதையும் எம்பிராய்டரி செய்து பார்க்கலாம்ன்னு செய்தோம். ரிசல்ட் நன்றாக இருந்தது. வாடிக்கையாளரும் அதையே விரும்ப. இப்போது எங்களின் அனைத்து டாசில்களும் 3டி டிசைன்களில் கொடுக்கிறோம். எங்களுடைய அனைத்தும் பிளவுஸ்களிலும் நூல் மற்றும் ஜரியில் எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடு கொண்டு தான் இருக்கும். பலருக்கு ஆரி மற்றும் சாதாரண எம்பிராய்டரிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எல்லாரும் பிளவுசில் ஆரி வேலைப்பாடு மட்டுமே தான் பயன்படுத்துவதாக நினைக்கிறாங்க. அப்படி கிடையாது. சில டிசைன்களில் சாதாரண எம்பிராய்டரியும் இருக்கும் ஆரி வேலைப்பாடும் இருக்கும்.
அதே சமயம் அதில் முத்து மற்றும் மணிகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஆரி மற்றும் சாதாரண எம்பிராய்டரி இரண்டுமே வெவ்வேறு ஊசியால் செய்யப்படும் எம்பிராய்டரி டெக்னிக். ஆரி வேலைப்பாடு ஜரி நூலில் மட்டுமில்லை சாதாரண நூலிலும் செய்யலாம். டெக்னிக் எதுவாக இருந்தாலும் முடிவில் வாடிக்கையாளரின் விருப்பம் தான். அவர்கள் சொல்லும் டிசைனை தான் நாங்க வடிவமைத்து தருவோம். மேலும் அதில் என்ன வேலைப்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்பதை முடிவு செய்வது தான் எங்களின் வேலை.
பிளவுஸ் பொறுத்தவரை நாங்க கஸ்டமைஸ் மட்டுமே செய்து தருகிறோம். எங்களிடம் ரெடிமேட் பிளவுஸ்கள் விற்பனைக்கு கிடையாது. ஆனால் நாங்க தயாரிக்கும் பிரத்யேக டிசைன்கள் கொண்ட பிளவுஸ்களை வாடிக்கையாளர்களுக்கு மாடலாக வைத்திருக்கிறோம். அதைப் பார்த்து அவர்கள் டிசைனை தேர்வு செய்வார்கள். சிலர் அந்த டிசைனே நன்றாக இருக்கிறது என்று அதையே வாங்கிச் செல்வார்கள். ஆனால் இங்கு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கஸ்டமைஸ் முறையில்தான் பிளவுஸ் தைத்து தருகிறோம்’’ என்றவர் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.
‘‘தற்போது எங்களின் கடை தி.நகரில் உள்ளது. இதனை மேலும் பல கிளைகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அடுத்து எம்பிராய்டரி குறித்த சிறப்பு பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. நாங்க பயன்படுத்தும் அனைத்து எம்பிராய்டரி வேலைப்பாடு குறித்து பயிற்சி அளிக்கிறோம். அந்த பயிற்சி மையத்தினை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் சுமதி.
தொகுப்பு: உமா