Sunday, September 8, 2024
Home » இரண்டு ஆழ்வார்களைத் தந்த ஸ்ரீ வில்லிபுத்தூர்

இரண்டு ஆழ்வார்களைத் தந்த ஸ்ரீ வில்லிபுத்தூர்

by Lavanya

ஆடிப்பூரம் (7.8.2024)

தினசரி வைணவர்கள் பூஜை நிறைவின் போது ஒரு திருத்தலத்தைப் பற்றிப் பாடியே பூஜையை பூர்த்தி செய்வார்கள். அந்தத் தலம் ஸ்ரீ ரங்கமா? இல்லை. திருமலையா? இல்லை. காஞ்சிபுரமா? இல்லை. ஸ்ரீ வைகுண்டமா? இல்லை ஆழ்வார் திருநகரியா? இல்லை. பின் எது தான் அந்தத் திருத்தலம் ஸ்ரீ வில்லிபுத்தூர்…ஆம்…ஆண்டாள் கோயில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர்.

அந்தப் பாசுரம் இதுதான்.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள்
ஓதுமூர்வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

இங்கே கவனிக்க வேண்டியது.

கோவிந்தன் உள்ள ஊரில் கோதை (ஆண்டாள்) அவதாரம் செய்ததாக உரை யாசிரியர்கள் கருதவில்லை. கோதை பிறந்த ஊர் என்பதால் அது கோவிந்தன் வாழும் ஊராம். அது மட்டு மல்ல. அந்த ஊர் எத்தனை நன்மைகளைச் செய்யும் தெரியுமா? பாடலைப் பாருங்கள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.

இந்த இரண்டு பாசுரங்களும் சொல்லாமல் திருவாராதனம் (பூஜை) நிறைவு பெறாது.

1. ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு பெருமை எத்தனையோ ஆலயங்கள் இருந்தாலும் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தான் இத்தனை பெருமை.
1.பன்னிரண்டு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்த ஊர். அப்பா பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம். மகள் ஆண்டாள் ஆனிக்கு அடுத்த மாதமாகிய ஆடி மாதம் பூர நட்சத்திரம்.
2.பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்பால் ஆழ்வார் ஆண்டாள். அந்த ஆண்டாள் அவதரித்த ஊர்.
3.பூமிப் பிராட்டியே ஆண்டாளாக அவதரித்த ஊர்.
4.பெருமாளை ஆண்டாள் மணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு மனைவியையும், மாமனாரையும் தந்த ஊர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.வராக புராணத்தில் இந்தத் தலத்தின் வரலாறு விளக்கப்பட்டுள்ளது எம்பெருமான் வராக அவதாரம் எடுத்து பூமித்தாயை தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை இந்தத் திருத்தலத்தில் கூறியதாக உள்ளது. எனவே இதனை வராக க்ஷேத்ரம் என்றும் குறிப்பிடுவார்கள்.ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் செண்பக வனமாக இருந்திருக்கிறது. அங்கு இரண்டு முனிவர்கள், இறைவனது சாபத்தால் வேடர்களாகப் பிறந்து வாழ்கிறார்கள். (வில்லி, கண்டன்) ஒருநாள் இருவரும் வேட்டைக்குச் செல்லும்போது, புலியால் கண்டன் உயிரிழக்கிறான். இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைந்து, ஒரு மரத்தடியில் கண்ணயர்கிறான். அவன் கனவில் தோன்றிய பெருமாள், கண்டன் உயிரிழந்த தகவலைத் தெரிவிக்கிறார்.மேலும், காலநேமி என்ற அசுரனை வதம் செய்ய இப்பகுதியில் எழுந்தருளியுள்ளதாகவும், ஆலமரத்தடியில் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கப் போவதாகவும் தெரிவித்தார். காட்டுப் பகுதியை அழித்து நகரமாக மாற்றி, அதில் தனக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்யும்படி பெருமாள் கூறியதையடுத்து, இந்த ஊருக்கு ‘ஸ்ரீ வில்லிபுத்தூர்’ என்ற பெயர் கிட்டியது.

2. வடபத்ரசாயி

108 வைணவ திவ்ய தேசங்களில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், 99-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வடம் ஆலமரம். பத்ரம். இல்லை. சாயி; சாய்ந்து பள்ளி கொள்ளுதல். ஆலிலைத் துயிலும் பெருமாள் தான் வடபத்ர சாயி என்று வடமொழியில் சொல்கிறார்கள்.
அற்புதமான விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஆலமரத்தடியில் ஆதிசேஷன் மீது ஸ்ரீ தேவி, பூதேவி அருகில் இருக்க சயன கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். மூலவரைச் சுற்றி, மூன்று பக்கங்களிலும் வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புரு நாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான பிரம்மதேவர், சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மது கைடபர், பிருகு முனிவர், மார்கண்டேய முனிவர் உருவங்கள் உள்ளன. இப்பொழுது உள்ள கோயிலை ஆண்டாள் கோயில், நாச்சியார் கோயில் என்பார்கள். ஒரு காலத்தில் இது பெரியாழ்வார் இல்லமாக இருந்தது. பெரியாழ்வார் வழிபட்ட கோயில் வடபத்ரசாயி கோயில். வாருங்கள், ஆண்டாள் கோயிலுக்குள் நுழைவோம். முதலில் அரச கோபுரம். நுழைந்தவுடன் வாயிலில் இருப்பது
பந்தல் மண்டபம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இடது கைப்பக்கம் கல்யாண மண்டபம். இதற்கு அடுத்தாற்போல் இடைநிலைக் கோபுரம், இதனைக் கடந்து ஒரு வெளிப் பிராகாரம் இருக்கும். இங்குதான். ஸ்ரீ ராமனுக்கும் ஸ்ரீ னிவாசனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன,
இடைநிலைக் கோபுரத்தை அடுத்த துவஜ ஸ்தம்பத்தின் வழியாகவே கோயில் உட்பிராகாரத்தக்குச் செல்லலாம். இந்தத் துவஜ ஸ்தம்ப மண்டபத்திலேதான் பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. உள் பிராகாரம் சென்றதும் நம்முன் இருப்பது மாதவிப் பந்தல், அந்தப் பிராகாரத்தைச் சுற்றிலும் நூற்றெட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாள் சித்திரவடிவில் நமக்குக் காட்சி கொடுப்பார்.

3. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

தான் சூடிப் பார்த்து, இந்த மாலை எம்பெருமானுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று சோதித்து, ஆண்டாள் அந்த காலத்தில் அனுப்பி வைத்தார். அதனால் தான் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொடி என்கிற திருநாமம். அந்தச் சரித்திர நினைவாக இன்றும் தினந்தோறும் முதல் நாள் இரவு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலையை வடபத்ரசாயியான பள்ளி கொண்ட பெருமாளுக்கு, மறுநாள் காலை முதல் மாலையாக அணிவிக்கிறார்கள். பெரியாழ்வார் தனது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோயிலில் காட்சி தருகின்றார். பெரியாழ்வார் கட்டி வைத்த மலர் மாலையை, தான் அணிந்து கொண்டு அழகு பார்த்த கண்ணாடி கிணறு இன்னும் ஆண்டாள் சந்நதிக்கு அருகாமையில் உள்ளது.
பெரியாழ்வாரின் வம்சத்தவர்கள் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். அதுவும் கோயிலுக்கு அருகாமையில் சந்நதித் தெருவில் இருக்கின்றனர். அந்த வம்சத்தில் வேதபிரான் பட்டர் என்ற திருநாமத்தோடு விளங்கிய அனந்த கிருஷ்ணனின் குமாரர் சுதர்சன் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். உற்சவ காலங்களில் ஆண்டாளுக்கும் ரங்க மன்னாருக்கும் திருமஞ்சனம் செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை அவர்களுக்கு உண்டு. மார்கழி மாதம் பத்தாம் நாள் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன்னுடைய பிறந்த இடமான பெரியாழ்வார் திருமாளிகைக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. அப்பொழுது தாய்வீட்டு சீதனமாக பச்சை பசுமையான காய்கறிகள் சமர்ப்பிக்கப்படுகிறது. மணிப் பருப்பு தளிகை அன்று விசேஷம். அதோடு கொண்டக் கடலை, சுண்டக் காய்ச்சிய திருப்பால், வெல்லம் சேர்த்த திரட்டுப்பால் இவைகளெல்லாம் பெரியாழ்வார் தன் பெண்ணான ஆண்டாளுக்கும் மாப்பிள்ளையான ரங்கமன்னாருக்கும்
தருவதாக ஐதீகம். பொதுவாக ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆகிய மூவரும் சேர்ந்து ஆண்டாளாகக் காட்சி அளிப்பது இங்குதான். மற்ற தலங்களில் பெருமாள் அருகில் ஸ்ரீ தேவியும் பூதேவியும் இருப்பார்கள். இந்தத் தலத்தில் தான் ஆண்டாளோடு மட்டும் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு வேறு எந்தத் திருத்தலத்திலும் இல்லாத அமைப்பு இங்கு திருமஞ்சனம் செய்யும் பொழுது ஆண்டாளின் சந்நதிக்கு முன்பு ஒரு காராம் பசு கொண்டு வரப்படுகிறது. தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி பின்னிரவில் சூடிய மாலையை கழற்றிக் கொடுக்க அதை பெருமாள் அணிந்து கொண்டு திருப்பள்ளி எழுச்சி ஆகிறார்.

4. ஸ்ரீ வில்லிபுத்தூரில் எத்தனை உற்சவங்கள் தெரியுமா?

ஆவணியில் பவித்ர உற்சவம் கோகுலாஷ்டமி. புரட்டாசியில் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். புரட்டாசி திருவோணத்தில் பெருமாளுக்கு திருத்தேரோட்டம், நவராத்திரியில் பத்தாம் நாள் விஜயதசமி அன்று பாரி வேட்டை உற்சவம். ஐப்பசி மாதத்தில் ஏழு நாட்கள் இத்திருக்கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் அற்புதமானது. அதற்கு அடுத்த மாதமான கார்த்திகையில் தீபத் திருநாள் விசேஷமாக கொண்டாடப் படுகிறது கைசிக ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் மார்கழி நீராட்ட உற்சவம் மிக அற்புதமாக தினந்தோறும் நடைபெறும் தினம் தங்கப்பல்லக்கில் ஆண்டாள் வட பெருங்கோயில் உடையான் ராஜகோபுரத்தின் திருவாசலில் எழுந்தருள்வாள். அன்று அந்தந்த நாளுக்குரிய திருப்பாவை பாசுரம் இசைக்கப்படும். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஆண்டாளுக்கு விதவிதமான அலங்காரங்கள் நடைபெறும். இதில் திருமுக்குளம் எனும் திருக்குளத்தின் அருகே நடை
பெறும் பக்தி உலா பரவசமாக இருக்கும். பொதுவாக கூடாரை வெல்லும் என்னும் திருநாள் மார்கழி மாதம் இருபத்தி ஏழாம் நாள் அது எல்லா வைணவத் திருத்தலங்களிலும் கொண்டாடப்படும். ஆனால் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தை மாதம் பத்தாம் தேதி கூடாரவல்லி உற்சவம் கொண்டாடப்படும். அதற்கு அடுத்த நாள் ஆண்டாள் பெரியாழ்வாரின் சந்நதியில் திருநாள் வைபவத்தைக் கண்டு கொள்வாள்.

5. ஆண்டாள் நடத்திய அற்புதம்

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பட்டர் ஒருவர் இருந்தார். ஆண்டாளின் மீது அளவற்ற பக்தி கொண்டவர் தன் உடல் பொருள் ஆவி எல்லாம் ஆண்டாளுக்கு என்று நினைத்து கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு 45 வயதாகும் பொழுது கர்ம வினையால் உடம்பெங்கும் தொழு நோய் வந்துவிட்டது. ஆண்டாளின் திருமேனிக்கு கைங்கர்யம் செய்யும் அவர் இனி கைங்கரியம் இல்லாமல் போய்விட்டதே என்று பதறி தம்முடைய வீட்டிலேயே இருந்தார். வீட்டிலிருந்தபடியே ஆண்டாளை மானசீகமாக வணங்கினார். ஆனால் நாளாக நாளாக நோய் அதிகரித்தது. அவருடைய உடலின் பாகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு உடலில் துர் நாற்றம் வீசத் தொடங்கியது அங்கங்கே புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. வீட்டைவிட்டு வெளியே தனி இடம் நோக்கி சென்றார். வீதிக்கு வெளியிலே குப்பை மண்டிக்கிடந்த ஒரு மண்டபத்தில் அவரும் குப்பையாக விழுந்து கிடந்தார். உடம்பில் தான் துர்நாற்றம் வீசினாலும் மனது சுத்தமாகவே இருந்தது. திருப்பாவையை தினமும் அனுசந்தித்துக் கொண்டு ஆண்டாளின் கருணையை மனக்கண்ணால் வாரி பருகிக்கொண்டிருந்தார். எப்போதாவது யாராவது ஒரு சிலர் அவருக்கு உணவு கொடுப்பது உண்டு அதை மட்டுமே உண்பார். இந்த வினையில் இருந்து என்று விடுதலை கிடைக்கும் என்று ஆண் டாளை மனமுருகிப் பிரார்த்தித்தார் அவருடைய பிரார்த்தனை நாளுக்கு நாள்
அதிகரித்தது. ஒருநாள் இரவு. நல்ல குளிர்ந்த காற்று, உடம்பை ஊசி போல் மோதியது. ஏற்கனவே உடலில் ரணங்கள். அதோடு அன்றைக்கு யாரும் உணவு தராததால் பசி மயக்கம். அதோடு அவர் மெல்ல நடந்து ஆண்டாள் திருக்கோயில் நோக்கி ஒரு மண்டபத்திற்கு சென்றார்.
யாரும் கவனிக்காத அந்த நள்ளிரவில் அவரருகே அற்புதமான அழகோடு ஒரு பெண். நிமிர்ந்து பார்க்கிறார். ‘‘பெண்ணே என்னைக் கண்டாலே 100 அடி தூரம் தள்ளிச் சென்று விடுவர். என் உடம்பில் வீசுகின்ற துர்நாற்றமானது அவ்வளவு மோசமானது. நீ ஊருக்கு புதியவள் போலிருக்கிறது என்னருகே வராதே… சென்றுவிடு. இதை உன்னால் தாங்க முடியாது. நீ ஏதோ ஆண்டாள் கோயிலை சேவிக்க வந்த வெளியூர் வாசி என்று நினைக்கிறேன். போய் ஆண்டாளைச் சேவித்துவிட்டு விரைவில் உன் ஊர் போய் சேர். இங்கே நிற்காதே.
ஆனால் அவள் அகலாமல் இவரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டு துடித்துப் போனார்.

‘‘அம்மா, உடனே செல். ஒரு நொடி கூட நிற்காதே.’’

அப்போதுதான் அந்தப் பெண் பேசினாள்.‘‘நான் ஆண்டாளைக் காண்பதற்காக வந்தேன். ஆனால் அவள் இந்த இடத்தில் இருப்பதாக யாரோ சொன்னார்கள் அதனால் அவளை இங்கே தரிசிப்பதற்காக வந்தேன்.’’ பட்டர் பதறிப்போனார் ‘‘என்னம்மா சொல்கிறாய், இந்த இடத்தில் ஆண்டாள் தரிசனம்? இந்த குப்பை அருகில்…இது நரகம்… நரகம். இங்கே ஆண்டாள் இல்லை… யாரோ உன்னை வழி மாற்றி அனுப்பி இருக்கிறார்கள். உடனே கோயிலுக்குச் செல் அங்கே திருமண வாயிலைத் தாண்டி மாதவிப்பந்தல் என்னும் மரகத மண்டபம் இருக்கும் அதனையும் கடந்து உள்ளே செல். என் தாயை அங்கே நீ தரிசிக்கலாம். ஒரு கணம் கூட நிற்காதே…இங்கு நிற்பதால் இந்த வியாதிகள் உன்னைத் தொற்றிக் கொள்ளும்.’’ என்று பெருங்குரலில் சொல்லி முடித்து மயங்கினார். அவர் வாய் திறந்தது கண்கள் சொருகி இருந்த நேரத்தில் அமுதம் போன்ற ஏதோ ஒரு உணவு, இதுவரை சுவைக்காத ஒரு அமுதம், அவர் வாயிலேயே விழுந்ததைக் கண்டு ‘‘அம்மா, இந்த உணவை நீயா கொடுத்தாய்?’’ என்று கேட்க, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே ‘‘ஆம்’’ என்று சொல்ல. “இதை நீ அங்கிருந்தபடியே ஒரு தட்டில் போட்டு இருந்தால் நான் சாப்பிட்டு இருப்பேன். என் அருகிலே வந்து இதை நீ கொடுக்க வேண்டுமா? இந்த எளியவனின் பசியை அறிந்து கொடுக்க வந்தாயே தாயே, இது இரவு நேரம். அதனால் என்னுடைய இந்த மோசமான உடம்பை பார்க்க முடியாமல் இருக்கிறாய் பகலில் மட்டும் நீ இந்த உடம்பை பார்த்திருந்தால் மூர்ச்சித்து விழுந்து இருப்பாய். அதனால் இங்கே நிற்காதே. அம்மா சென்று விடு.அப்பொழுது அந்தப் பெண் ஒரு பாத்திரத்தில் வைத்திருந்த உணவை எடுத்து மறுபடியும் அவருடைய வாயிலே போட, அடுத்த கணம் சற்றும் எதிர்பாராமல் அந்தப் பெண்ணின் அழகுக்கரம் அவருடைய உடம்பில் பட்டது. அடுத்த நிமிடம் அவருடைய நோய் இருந்த இடமே தெரியாமல் மறைந்தது. புத்தம் புது மனிதனாக இருந்தார். மிக ஆரோக்கியமானவராக எழுந்து நின்றார்.பட்டரே இனி உனக்கு ஒரு குறைவும் இல்லை நான் வருகிறேன் என்று சொல்லி அந்தப் பெண் நடக்க அம்மா ஒரு நொடி நில் உன்னுடைய திருமுகத்தை ஒரே ஒருமுறை காட்டிவிட்டுச் செல் என்று பதறியபடி பட்டர் தொடர்ந்து ஓட அடுத்த நிமிடம் அந்த காட்சி மறைந்தது.
வந்தவள் ஆண்டாள் நாச்சியார் தான் என்பதை உணர்ந்து அவருடைய மனம் சிலிர்த்தது.
ஆண்டாளின் அந்த அருட் கருணையை நினைத்து அவர் பாடிய அற்புதமான நூல் தான் 16 பாசுரங்கள் கொண்ட சந்திரகலா மாலை. சந்திரனுக்கு கலைகள் பதினாறு அல்லவா. ஒவ்வொரு நாளும் அந்த கலைகள் வளர்ந்து பூரணத்துவம் பெறுவது போல ஆண்டாளின் பெருமைகளை ஒவ்வொரு பாடலாக விவரிப்பது இந்த அற்புதமான நூல். இந்த நூலை சேவிப்பவர்களுக்கு நோய் நொடிகள் எதுவும் ஆண்டாளின் அருளால் அணுகுவதில்லை. இத்தனை சிறப்பு மிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை ஒருமுறை சென்று சேவிப்போமே.

1. பூஜை நேரங்கள்
1. விஸ்வரூப பூஜை காலை 06:30 AM
2. காலசந்தி பூஜை காலை 08:30 AM
3. உச்சிக்கால பூஜை பகல் 12:00 PM
4. சாயரட்சை பூஜை மாலை 06:00 PM
5. அரவணை இரவு 9.00
2. ஆண்டாள் கிளி
இந்தக் கோயிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சா வழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு, மாதுளம் பூக்கள் இவற்றைக் கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்து
வருகிறார்கள்.
3. திருப்பதிக்கு ஆண்டாள் மாலை
திருப்பதியில் உள்ள வேங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது.
4. பிரார்த்தனை
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இந்த திருத்தலத்திற்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
5.தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.
6.ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் தேரில் ராமாயணம், மகாபாரதம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்தத் தேரில் செதுக்கப்பட்டுள்ளன.
7.வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
8. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரம் பதினொரு மாடி உயரமும் 59 மீ உயரமும் கொண்டது, தமிழக அரசு சின்னமாக உள்ளது.

முனைவர் ஸ்ரீராம்

You may also like

Leave a Comment

five + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi