நன்றி குங்குமம் டாக்டர்
உடலில் ஏற்படும் 90 சதவீத நோயினை நாம் உட்கொள்ளும் உணவின் வழி குறைக்கலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஆகையால் சரியான சரிவிகித உணவுமுறையை பின்பற்றுதல் மிக அவசியமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் பல்வேறு நோய்களிலிருந்து தப்பிக்க பச்சைக் காய்கறிகள், பச்சைநிற காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் பச்சை நிறமுடைய கீரைகள் உடல் நலத்தினை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலானோர் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் முக்கியமான கீரைகளில் ஒன்று முளைக்கீரை. முளைக்கீரையினை தண்டுக்கீரை எனவும் அழைப்பர், என்றாலும் இளம் கீரை முளைக்கீரை எனவும், நன்கு வளர்ச்சிபெற்ற கீரையை தண்டுக் கீரை எனவும் கூறப்படுகிறது. முளைக்கீரையில் இருவகைகள் உண்டு. ஒன்று பச்சை நிற தண்டினை உடையது. மற்றொன்று சிவப்பு நிறத் தண்டினை உடையது.
முளைக்கீரையின் தண்டுகள் அதிக சத்தும், சுவையும் கொண்டதினால் இக்கீரையினை தண்டுடன் சேர்த்து சமைக்கலாம். மேலும் முளைக்கீரை அனைத்து காலங்களிலும், பலவிதமான தட்ப வெப்ப சூழ்நிலைகளை தாங்கியும் வளரும் இயல்புடையவை. இக்கீரை உலகளவில் காணப்பட்டாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் தென் இந்திய பகுதிகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
முளைக்கீரையின் தாவரவியல் பெயர்:
அமராந்தஸ் பைலேட்டம்
முளைக்கீரையில் காணப்படும் சத்துகள்:
வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. மேலும், இரும்புசத்து , தாமிரச்சத்து, சுண்ணாம்புச் சத்து, ( கால்சியம், பாஸ்பரஸ்) போன்ற தாதுக்களும் செரிந்து காணப்படுகின்றன. இருப்பினும் வைட்டமின் ஏ ன் அளவினை இக்கீரை கணிசமாக கொண்டிருப்பதால் இக்கீரை கண்பார்வை பிரச்னைக்கு, ஓர் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.
முளைக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:
பீட்டா சயனின், பீட்டாசாந்தைன், பீட்டாலைன், பிலேவோனாய்டுகள், ஆந்தோசயனின் அமராந்தைன் போன்ற நன்மை அளிக்கும் மூலக்கூறுகளை முளைக்கீரை கொண்டுள்ளது.
முளைக்கீரையின் மருத்துவப் பண்புகள்:
முளைக்கீரையினை மூளை வளர்ச்சி பாதிப்படைந்தவர்கள், வயிற்றுப்புண் பிரச்னை உடையவர்கள் மற்றும் பித்தம் அதிகரிப்பினால் பாதிப்படைந்தவர்கள் என பலரும் தவறாது உணவில் சேர்த்து பயன்பெறலாம். மேலும், அனைத்து வகையான காய்ச்சல், செரிமான பிரச்னை, ரத்தசோகை மற்றும் முகம் பொலிவினை அதிகரிக்க முளைக்கீரை பயன்படுகிறது. பொதுவாக சருமநோய்கள் பிரச்னைகளுக்கு முளைக்கீரையினை உணவில் சேர்த்து பயனடையலாம்.
மேலும், முளைக்கீரையின் தண்டுகளை சிறியதாக்கி, சீரகத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, நன்மை பெறலாம். குறிப்பாக, மூலநோய் பிரச்னை உடையவர்கள் முளைக்கீரையுடன் துத்திக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வர மூலம் சம்பந்தமான பிரச்னைகளை நீக்கமுடியும்.இளைத்த உடம்பு தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைப் போக்கும், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
கண் எரிச்சலுக்கு மருந்தாகவும், நரம்பு தளர்வினை நீக்கி நரம்புகளின் செயல்களை மேம்படுத்தவும் உதவுகிறது. முளைக்கீரையின் மருந்து பயன்களை பதார்த்த குணபாடம் கீழ்கண்டவாறு கூறுகிறது.முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.
முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும். முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
பாடல்
முளைக்கீரை குணம்
தளர்ந்தவர்க்கும் பாலார்க்குந் தக்கவயதோர்க்கும்
மிளங்கீரை நாவுக் கிதமாங் – கிளம்பு
சுரகாசம் போக்குந் தொடர்பசி யுண்டாக்கும்
பிரகாசமா யெடுத்துப் பேசு.
இக்கீரையை சிறுநீரக கல், பித்தகீபைகள் பிரச்னைகள் உடையவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைகளுக்கு பிறகு எடுத்துக் கொள்வது நலம்.