*கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள்
திருமயம் : அரிமளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் முத்து பாலுடையார் கோயில் கும்பாபிஷேகம், ராஜேஷ் நினைவு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று காலை நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
8 மைல் தூரம் கொண்ட பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், 6 மைல் தூரம் கொண்ட சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டிப்பந்தயத்தில் சாரதிகள், கட்டளைக்கேற்ப மாடுகள் ஒன்றோடு ஒன்று முந்தியபடி சீறிப்பாய்ந்து சென்றன.
பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை அரிமளம் சேர்த்து மேல் செல்ல ஐயனார், 2ம் பரிசை காடாத்திவயல் தமிழ் நாச்சியார், 3ம் பரிசு அம்புராணி பழைய மாங்குடி சாஸ்த அய்யனார், 4ம் பரிசு ஆறா வயல் லட்சு பிரதர்ஸ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
சிறிய மாடு பிரிவில் முதல் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 2ம் பரிசு வெங்களூர் செல்வ கணபதி, 3ம் பரிசு கூத்தாடி வயல் சண்மதி சாருமதி, 4ம் பரிசு கே.புதுப்பட்டி கே ஏ அம்பாள் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பந்தயம் நடைபெற்ற அரிமளம் – புதுக்கோட்டை சாலை இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்கள் பந்தயத்தை கண்டு ரசித்ததோடு, மாடுகளையும், சாரதிகளையும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை முன்னிட்டு அரிமளம் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.