செம்பனார்கோயில்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). காரைக்கால் மாவட்ட தவாக செயலாளர். கடந்த 2021ல் காரைக்கால் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து, பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம்தேதி மயிலாடுதுறை அருகே மணிமாறனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலையில் தேவமணியின் உறவினரான எஸ்ஐ ஒருவருக்கும் ெதாடர்பு இருப்பதாக அவரது சகோதரர் காளிதாசன் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் தேவமணியின் மகனும், காரைக்கால் மாவட்ட பாமக செயலாளருமான பிரபாகரன் (29), திருநள்ளாரை சேர்ந்த குணசேகரன் (23), வீரமணி (45), டிரைவர் முருகன் (23) ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்தில் நேற்று சரண் அடைந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி கூலிப்படையை சேர்ந்த புதுச்சேரி மடுகரை மணிகண்டன் (36), சண்முகாபுரம் சரவணன் (33), அய்யங்குட்டிபாளையம் சகன்ராஜ் (29), கவுண்டன்பாளையம் சரவணன் (28), தேங்காய்திட்டு அஜய் (22), முகிலன் (22), விஜயசங்கர் (30) ஆகிய 7 பேர் நேற்று வளவனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.