சென்னை: தூத்துக்குடி அருகே வங்கக்கடலில் முப்படைகளும் கூட்டாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றன. தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாகும். தமிழகத்தின் கிழக்கே இலங்கை அமைந்து உள்ளது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக அறியப்பட்டாலும், சமீப காலமாக அங்கு சீனாவின் ஆதிக்கம் இந்தியாவை உஷார்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென்பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் முக்கியமான உற்பத்தி கேந்திரங்கள் அனைத்தும் தென்மாவட்டங்களில் உருவாக்கப்பட்டன. குறிப்பாக அணுசக்தி துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், கனநீர் ஆலை உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தென்மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே தூத்துக்குடியை மையமாக கொண்டு கடலோர காவல்படை இயங்கி வருகிறது. இதனால் பாதுகாப்பு படைகளின் தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியா தமிழக கடலோர எல்லையை பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்டி உள்ளது.
இந்நிலையில் வங்காளவிரிகுடா கடலின் ஆழ்கடல் பகுதிகளில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடக்கிறது. இதற்காக இந்திய கப்பல் படையின் இரு போர்க்கப்பல்கள், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன. அவற்றில் தரைமார்க்கமாக வந்த ராணுவ அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டதாகவும், பின்னர் ஆழ்கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு பக்கபலமாக சென்னையில் இருந்து குமரி வரையில் கடலோரபகுதிகள் வழியாக கடற்படை ஹெலிகாப்டர் கடந்த 3 நாட்களாக காலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருவது உறுதிதான் என்றும் நாட்டின் பாதுகாப்பு காரணம் கருதி வேறு தகவல்கள் தெரிவிக்க அனுமதியில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.