தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 55 கோயில்களில் திருப்பணி முடித்து, கும்பாபிஷேகம் நடத்த மாநில கமிட்டிக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணி செய்து அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். எந்த காரணம் கொண்டும் பழமையில் மாற்றம் செய்து விடக் கூடாது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவின்படி தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக சைவ மற்றும் வைணவத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வல்லுநர் குழுவை மாநில மற்றும் மண்டல அளவில் அரசு அமைத்துள்ளது. மண்டல அளவிலான குழு, 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை கூடி, 12 ஆண்டுகள் கழிந்தும் கூட கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் அனைத்து கோயில்களிலும் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் துாத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பழமை வாய்ந்த திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான மண்டல அளவிலான வல்லுனர் குழு கூட்டம் நடந்தது. வல்லுநர் குழுவினர், தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள், கோயில் ஆய்வாளர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்த தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 55 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்வது தொடர்பாகவும், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளவதற்கு முன்பு மண்டல கமிட்டி ஆய்வு செய்து அந்த கோயில்களின் பழமை மாறாமல் எவ்வாறு திருப்பணிகள் மேற்கொள்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துருக்களை மண்டல அளவிலான கமிட்டியினர் மாநில கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து மாநில கமிட்டி இசைவு தெரிவித்த பிறகு திருப்பணி வேலைகள் துவங்கும் என்று இந்துசமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோயில்களான திருப்புளியங்குடி காசினிவேந்த பெருமாள் கோயில், பெருங்குளம் மாயகூத்தர் கோயில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனார் கோயில், ஸ்ரீவைகுண்டம் நதிக்கரை சுப்பிரமணியசுவாமி கோயில், கால்வாய் கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களும், தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் வடகரை ஆதிமணிகண்ட சாஸ்தா கோயில், பண்பொழி வேல்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட துாத்துக்குடி மாவட்டத்தில் 35 கோயில்களிலும், தென்காசி மாவட்டத்தில் 20 கோயில்களிலும் சேர்த்து மொத்தம் 55 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு மாநில குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில குழு ஆய்விற்கு பிறகு விரைவில் இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலயத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.