சின்னசேலம் : கச்சிராயபாளையம் கோமுகி அணை கட்டப்படுவதற்கு முன்பு இருந்தே கோமுகி ஆறு உள்ளது. அதாவது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோமுகி ஆறு பாய்ந்தோடுகிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மேட்டுப்பாளையம், ஏர்வாய்பட்டிணம், மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு உள்ளிட்ட கோமுகி ஆற்றங்கரையோர கிராம மக்கள் ஆற்றில் மணல் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்ததுடன், ஆற்றில் குளித்தல், துணி துவைத்தல் என பயன்படுத்தி வந்தனர்.
மேலும் அப்போதெல்லாம் கோமுகி ஆறு மணல் பரப்பாக காணப்படும். ஆனால், காலப்போக்கில் கோமுகி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதுடன், ஆற்றில் கோரைப்புற்கள், சோளதக்கைகள், முட்செடிகள் வளர்ந்து அடர்ந்த காடுபோல மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, துணிதுவைப்பது போன்ற பயன்பாட்டையே விட்டுவிட்டனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால் மாறாக தற்போது ஆற்றுப் பகுதியில் சூதாட்டம், மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்கள் நடந்துவருகின்றன. தற்போது கோமுகி ஆற்றில் அடர்ந்த முட்செடிகள் வளர்ந்துவிட்டதே தவிர அன்று போலவே மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் அதிக நீர்வரத்து ஏற்படும்போது ஆற்றில் செடிகள் வளர்ந்து தடை ஏற்படுவதால் ஊருக்குள்ளும், அருகில் உள்ள வயல்வெளிகளிலும் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், கோமுகி அணையின் நீர்வள ஆதாரத்துறையும் இணைந்து சிறப்பு திட்ட நிதியில் கோமுகி ஆற்றில் பாலத்தில் இருந்து வெங்கட்டம்மாபேட்டை அணைகரை வரை கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு, முட்செடிகளை அகற்றுவதுடன், நடுவில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல ஆற்றங்கரையோரம் வளர்ந்துள்ள மரங்களையும் ஏலம் விட்டு வெட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து, அரசிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.