Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பில் முடிவு எட்டவில்லை; டங்ஸ்டன் சுரங்க விவகாரம் இன்று முக்கிய அறிவிப்பு: ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் மக்கள் எச்சரிக்கை

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து குறித்து ஒன்றிய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமடையுமென அரிட்டாபட்டி மக்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் எடுக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இதை ரத்து செய்து, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதியினர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும் சட்டசபையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து ஒன்றிய அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி ைவத்தது. இதனிடையே, பாஜ பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அரிட்டாபட்டி பகுதி கிராமத்தினர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். இவர்கள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், ஒன்றிய அமைச்சர், பிரதமருடன் பேசிய பிறகு, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்’ எனவும் கூறினார். இது அரிட்டாபட்டி பகுதியினரிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அரிட்டாபட்டி கிராம மக்கள் கூறும்போது, ‘‘ஜன.23ல் (இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என சுரங்கத்துறை ஒன்றிய அமைச்சர் கூறியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம். இந்த அறிவிப்ைப எதிர்பார்த்து நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்தோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சொல்வதை நம்பமுடியாது. தலைவர் பதவி மாறிவிட்டால், கட்சி கருத்தாக போய் விடும். இந்த அறிவிப்பு கிராம மக்களை நிம்மதியாக தூங்க விடாமல் செய்து விட்டது. மனரீதியாக பாதிக்கப்பட்டு, வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளோம். இது போன்ற அறிவிப்பை கூற சுரங்கத்துறை அமைச்சருக்கு தான் முழு அதிகாரம் உண்டு.

இந்த திட்டம் நிரந்தர ரத்து என அறிவிப்பு வர வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடும் அரசாணை தான் வேண்டும், எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, கைவிடுவதாக ஒன்றிய அமைச்சரோ, பிரதமரோதான் அறிவிக்க வேண்டும். முழுமையாக ரத்து செய்து, அரசாணை வெளியிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும். எங்கள் உயிரை இழந்தாலும், ஒரு துளி கனிமத்தையும் எடுக்க விட மாட்டோம்’’ என்றனர்.