நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜவுளித்தொழிலுக்காக வழங்கிய ரூ.25 லட்சத்தை நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தியடைந்த இன்ஜினியர், தனது தாயுடன் விஷவாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஒட்டப்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேல்(65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகன் விஜய்ஆனந்த்(30). இன்ஜினியரான இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில் பழனிவேல் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக, பாலக்கோடு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து பழனிவேல், அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கை அறையில் மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய்ஆனந்த் ஆகியோர், முகத்தில் பிளாஸ்டிக் கவர்களை கட்டிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகில் இரண்டு காஸ் சிலிண்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த சிலிண்டர்களில் இருந்து குழாய் ஒன்று, இருவரின் தலையை சுற்றிய பாலித்தின் கவருக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சோதனையிட்டனர். அப்போது, இந்த அறை முழுவதும் (நைட்ரஜன் ஆக்சைடு) விஷவாயு உள்ளது. உடனடியாக ஜன்னலை உடைத்து விட்டு, போலீசை அழைத்து வாருங்கள் என, பேப்பரில் எழுதி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு, காஸ் சிலிண்டரை மூடினர். தொடர்ந்து சோதனையின் போது அங்கு விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் ‘நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜவுளித்தொழில் செய்து வந்தேன். அதற்காக ரூ.25 லட்சம் கொடுத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்னை ஏமாற்றியதோடு, நான் கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல், பல்வேறு முறைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் விரைவாக தீர்வுகாண வேண்டும் என, உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்’ என எழுதி வைத்திருந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண்(36), கார்த்திக் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.