வெற்றி உங்களுடைய இலக்கு என்றால் தோல்வி அதை அடைவதற்கான பாதை என்று எண்ணிக்கொள்ளுங்கள். ஒரு வெற்றியில் இருந்து பெறுகின்ற பலனை விட தோல்வியில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகள் அதிகம்.தங்கள் வெற்றிக்கான விவேகத்தைத் தோல்வியில் இருந்தே பலரும் பெற்றிருக்கிறார்கள்.தோல்வியில் பொருளை இழக்கலாம்,பெயரை இழக்கலாம், சுற்றியுள்ள மனிதர்களை இழக்கலாம். ஆனால் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எத்தகைய வீழ்ச்சிக்குப் பிறகும் மேலெழ முடியும். அடுத்த அடியில், அடுத்த நொடியில் வெற்றி என்கிற நிலையில் தங்கள் முயற்சியிலிருந்து விலகியவர்கள் உண்டு. அந்தத் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்.
எப்போதும் நம்முடைய தோல்விக்கு நாமேதான் காரணம், கொஞ்சம் கூடுதல் முயற்சி,கூடுதல் உழைப்பு மற்றும் கூடுதல் ஆர்வம் இருந்திருந்தால் வெற்றி கைநழுவி விடாது.
மின்விளக்கைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் நீங்கள் நிறையவே வீணடித்து விட்டீர்கள்! இப்படிப் பலரும் எடிசனிடம் சொல்லியதுண்டு. ஆனால், தன்னுடைய 10,000வது முயற்சியில்தான் மின் விளக்கைக் கண்டுபிடிப்பதில் வெற்றிபெற்றார் எடிசன். நான் தோற்கவில்லை. மின்விளக்கைக் கண்டுபிடிப்பதில் எவையெல்லாம் தவறான செய்முறைகள் என்பதைத்தான் ஆராய்ந்து தெரிந்துகொண்டேன் என்றார் எடிசன்.
தோல்வியால் துவளாமல், தொடர்ந்து முயன்ற காரணத்தால்தான் எடிசனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கி காப்புரிமை பெற முடிந்தது.ஒருசில வெற்றியைப் பெற தவறுகிறபோது எண்ணிக்கொள்ளுங்கள் ”இன்னும் பெரிய வெற்றி காத்திருக்கிறது” என்று.அப்படி காத்திருந்து வெற்றி பெற்றவர் தான் தோல்வியை வெற்றியாக மாற்றிய சிங்கப்பெண் அஞ்சு சர்மா.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு சர்மா தோல்வியில் பூத்த வெற்றி மலர்.பள்ளியில் படிக்கும்போது சாதாரண மாணவியாகத் தான் இருந்தார்.
இந்த நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். பள்ளியில் ஆசிரியர்கள் மக்கு மாணவி என்று திட்டினார்கள். ஆனால் மனம் தளரவில்லை. மீண்டும் முயற்சிசெய்து மறுதேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதும் இதே நிலை நீடித்தது.12ஆம் வகுப்பில் பொருளாதார பாடத்தில் தோல்வியுற்றார். பொதுத்தேர்வுக்கு முன்பே நிறைய படிக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் சரியாகப் படிக்காததால் இரவு உணவுக்கு முன்பிருந்தே என்னை ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. நிச்சயம் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நான் தோல்வி அடைவேன் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் தான் எனது உயர்கல்வியை தீர்மானிக்க முடியம் என்பதை என்னை சுற்றி இருந்தவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும் நான் சரியாக படிக்காததால் 12ஆம் வகுப்பில் பொருளாதார பாடத்தில் தோல்வி அடைந்தேன் என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் அஞ்சு சர்மா.
இந்தக் கடினமான நேரத்தில் அஞ்சு சர்மாவின் அம்மா அவருக்கு ஆறுதலாக இருந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். கடைசி நிமிடப் படிப்பை நம்பி இருக்கக்கூடாது என்ற பாடத்தையும் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு அஞ்சு சர்மா மீண்டும் தேர்வு எழுதி பொருளாதாரப் பாடத்தில் தேர்ச்சி பெற்றார்.பொதுத்தேர்வு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். கிடைத்த இரண்டு அனுபவங்கள் தான் அவரது வாழ்க்கையை வலுவானதாக மாற்ற உந்துதலாக அமைந்தது. அதன் பிறகு கல்லூரி படிப்பில் தனது மதிப்பெண்களுக்கு கிடைத்த படிப்பை விரும்பிப் படித்தார். பள்ளியில் செய்த தவறை திருத்திக் கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே கல்லூரித் தேர்வுகளுக்கு தயாராகும் பயிற்சிகளை முயற்சியுடன் தொடங்கியதால் பிஎஸ்சி மற்றும் எம்.பி.ஏ படிப்பில் அஞ்சு சர்மா சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.இருந்தபோதும் இன்னும் ஜெயிக்க வேண்டும், ஜெயித்தால் மட்டும் போதாது, சாதிக்க வேண்டும் என்பதை ஆழ்மனதில் ஆழமாகப் பதியவைத்துக் கொண்டு ஒரு புதிய இலக்கைத் தீர்மானித்தார்.
அந்த இலக்கு என்ன தெரியுமா? யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐ.ஏ.ஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கு தான். ஆனால், பள்ளிப் படிப்பிலேயே தேர்ச்சிபெற கஷ்டப்பட்ட உன்னால் எப்படி கலெக்டர் ஆகமுடியும்? சாத்தியமே இல்லை என்றார்கள் உற்றார் மற்றும் உறவினர்கள். ஆனால், அஞ்சு சர்மா மனம் தளரவில்லை. தனது ஐ.ஏ.ஸ் கனவில் இருந்து பின்வாங்கவில்லை. தனது இலக்கை உறுதியான முடிவாக மாற்றிக்கொண்டார்.கல்லூரியில் பயன்படுத்திய உத்தியை அஞ்சு சர்மா தனது யுபிஎஸ்சி தேர்விலும் கடைப்பிடித்தார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடங்களை அனைத்தையும் முன்னதாகவே படித்து முடித்து மீண்டும் மீண்டும் திருப்புதல் முறையில் படித்து அஞ்சு சர்மா யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணலிலும் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ்.பணியை பெற்று சாதித்தார்.ஆரம்ப காலக்கட்டத்தில் குஜராத்தில் உதவி கலெக்டராகபணியைத் தொடங்கினார்.
தற்போது குஜராத் மாநிலக் கல்வித்துறையில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முதன்மைச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.பள்ளிப்படிப்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்தபோதும் மனம் தளராமல் முயன்று முதல் முயற்சியில் ஐ. ஏ.எஸ் ஆன அஞ்சு சர்மாவின் வாழ்க்கை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயர் அரசு அதிகாரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கப்படுத்தக்கூடிய செய்தியாகும். அது மட்டுமல்ல தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற சாதாரண விஷயங்களுக்கு தவறான முடிவுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அஞ்சு சர்மாவின் வாழ்க்கை ஒரு உன்னத பாடமாகும்.
நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல்கலாம் அவர்கள் சொல்வது என்னவென்றால் வாழ்வில் வெற்றி பெற இலக்கைத் தீர்மானியுங்கள். அந்த இலக்கு உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும். குறைந்த இலக்கு குற்றம் என்றார். இதை த்தான் அஞ்சு சர்மா தன் வாழ்வில் கடைபிடித்து ஐ.ஏ.எஸ் என்ற உயர்ந்த இலக்கை அடைந்து சாதித்து உள்ளார். கூடுதல் முயற்சி,கூடுதல் உழைப்பு மற்றும் கூடுதல் ஆர்வம் இருந்தால் உயர்ந்த இலக்கில் பெரிய வெற்றியைப் பெறலாம் என்பதைச் சாதித்தும் காட்டியுள்ளார். உங்கள் வாழ்விலும் ஒருசில வெற்றிகளை தவறவிடும்போது மனம் தளராமல் தோல்விகள் தோற்கும்வரை முயற்சி செய்யுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள், நிச்சயம் உங்களுக்காகவும் பெரிய வெற்றி காத்திருக்கிறது.