சென்னை: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக் கூட பல பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் மக்கள் குறை தீர்ப்பு திட்டங்களின் லட்சணம் பற்றியெல்லாம் தெரியாமல் ஏன் அறிக்கை என்ற பெயரில் தினமும் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? ‘முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை 2019 ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டு வந்தார் பழனிசாமி. அதாவது சரியாக நடந்ததா? என்றால் இல்லை. அதன்பிறகு அதற்கும் மேலாக 12.78 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம் ஒன்றை பழனிசாமி அறிவித்தார். எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்கப் போகிறது என்று புது முலாம் பூசினார்.
அம்மா கால் சென்டர்’ திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். 2018ம் ஆண்டு 3,43,418 அழைப்புகளும் 2019ல் 2,51,886 அழைப்புகளும் வந்தன. அதாவது முந்தைய ஆண்டைவிட 2019ல் அழைப்புகளின் எண்ணிக்கை குறைந்ததே திட்டத்துக்கு வரவேற்பில்லை என்பதைக் காட்டியது, ஜெயலலிதா சுட்ட தோசையை 5 ஆண்டுகள் கழித்து 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்டி போட்டார் பழனிசாமி. ஜெயலலிதா தொடங்கிய ‘அம்மா கால் சென்டர்’ திட்டத்தை முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் என புதுசாக மேக் அப் போட்டுக் கொண்டு வந்தார் பழனிசாமி. இப்படி ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்திலேயே தன் பெயரைப் பதித்த பழனிசாமி விளம்பரம் பற்றி எல்லாம் பேசலாமா?
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையையே உருவாக்கி முதல்வர் உத்தரவிட்டார். 100 நாட்கள் முடிவில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்தன. முதலமைச்சரின் உதவி மையம் சென்னை, கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களின் குறைகளும் சந்தேகங்களும் தீர்க்கப்பட்டுள்ளன. இப்படித் தனது ஆட்சியில் சொல்வதற்கு எதுவும் இல்லையே, எனும் விரக்தியில் பழனிசாமி உளறித் திரிவதைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது. பழனிசாமிக்கு எத்தனை உண்மைகளைச் சொன்னாலும் பச்சைப் பொய் பேசும் பழக்கம் மட்டும் மாறப் போவதில்லை.