தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்வது பழநி. இந்த பழநியில் நேற்று தொடங்கிய ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ ஆன்மீக முன்னோடிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அளப்பரிய திட்டங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது அறநிலையத்துறை. இதற்கு மகுடம் வைத்தது போல் இப்போது நடந்துள்ளது முத்தமிழ் முருகன் மாநில மாநாடு என்பது பக்தர்களின் எண்ண ஓட்டமாக மாறி நிற்கிறது.
இது ஒரு புறமிருக்க, திராவிட மாடல் அரசு என்ற முழக்கத்தை கேட்டவுடன் ‘இவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள்’ என்று கூக்குரல் போடுவதற்கு ஒரு கும்பல் இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கென்று தனித்துவமான திட்டங்களை தந்து அதன் அடையாளத்தை உயர்த்திய முதல்வர்களில் முதன்மையானவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஒரு காலகட்டத்தில் பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சகர் பணி என்ற மூன்றும் ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்தது.
அதை சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி, எல்லோருக்குமான ஒன்றாக மாற்றிய மகானும் கலைஞர் தான். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்வு தான், குறிப்பிட்ட கும்பல் திராவிட மாடல் அரசை விமர்சிக்க காரணம். இந்தநிலையில் பழநியை பரவசத்தில் ஆழ்த்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடும், அதில் காணொளியில் முதல்வர் ஆற்றிய முத்தான உரையும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிந்த நீரோடையாய் உணர்த்தியுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நம்பிக்கை இருக்கும்.
அதில் உயர்வு, தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
திமுகவின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதல்வர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்பட ேவண்டும் என்ற ேநாக்கத்துடன் அந்தச் சட்டம் ெகாண்டு வரப்பட்டது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது திராவிடத்தின் ஆணி வேரே அறநிலையத்துறைக்கு அடித்தளம் அமைத்தது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதே நேரத்தில் ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். இதன் மூலம் அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும் என்று முதல்வரின் உரை நிறைவு பெற்றுள்ளது. இந்தவகையில் முதல்வரின் உயரிய சிந்தனை திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற இலக்கையும் இங்கு உணர்ப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.