வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மசோதா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சொந்த கட்சியை சேர்ந்த 2 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். மேலும் இந்த மசோதாவில் பணக்காரர்களுக்கு வரிச் சலுகையும், ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஆளும் குடியரசுக் கட்சியின் நீண்டகால கொள்கைகளான வரிக்குறைப்பு, எல்லைப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்துதல், சமூக நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2017ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ‘வரிச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புச் சட்டம்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிய மசோதாவையும் அமல்படுத்த தீவிரம் காட்டினார். இந்நிலையில் முந்தைய ‘வரிச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புச் சட்டம்’ அடிப்படையாக கொண்ட சட்டத்தின் பல முக்கிய அம்சங்களை நிரந்தரமாக்குவதே தற்போதைய புதிய மசோதாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேலும், எல்லைச் சுவர் கட்டுவது மற்றும் குடியேற்ற விதிகளை கடுமையாக்குவது போன்ற டிரம்ப்பின் கொள்கைகளைச் செயல்படுத்த அதிக நிதி ஒதுக்குவதும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணமாகும். இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ‘ஒன் பிக் பியூட்டிபுல் பில்’ என்ற 800 பக்க புதிய மசோதாவை 218-214 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியுள்ளது.
இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதிபர் டிரம்ப்பின் கையெழுத்துக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, டிப்ஸ் மற்றும் ஓவர்டைம் வருமானத்திற்கு வரிவிலக்கு, நிலையான வரி விலக்கு வரம்பு உயர்வு போன்ற புதிய தற்காலிக வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்ற அமலாக்கப் பணிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த செலவுகளை ஈடுகட்ட, ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘மெடிகெய்ட்’ மற்றும் உணவு உதவித் திட்டமான ‘ஸ்நாப்’ ஆகியவற்றில் பெரும் நிதிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது மருத்துவம் மற்றும் உணவு உதவிகளை இழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவால், அமெரிக்காவின் பற்றாக்குறை $3.3 டிரில்லியன் அதிகரிக்கும் என்றும், இந்த மசோதா பணக்காரர்களுக்கு அதிக வருமானத்தையும், ஏழை மக்களின் வருமானத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும் எனப் பட்ஜெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.