சிகாகோ: அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் அதிபரானால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் களம் இறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலாஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 3 நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அதிபர் பைடன், முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஓபாமா உள்ளிட்டோர் கமலா ஹாரிசை வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்று உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலுடன் நமது தேசம் கடந்த கால கசப்பு, இழிந்த தன்மை மற்றும் பிளவுபடுத்தும் போர்களை கடந்து செல்ல ஒரு விலைமதிப்பற்ற, விரைவான வாய்ப்பு உள்ளது. முன்னோக்கி செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. எந்தவொரு கட்சி அல்லது பிரிவின் உறுப்பினர்களாக அல்ல, அமெரிக்கர்களாக நாம் அனைவரும் இணைந்து முன்னோக்கி செல்வோம். ஆனால் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரச்னைகள் ஏற்படும். அவர் ஒரு தீவிரமான மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமானவை.
2020 தேர்தலின் போது டிரம்ப் உங்கள் வாக்குகளை தூக்கி எறிய முயன்றார். அவர் தோல்வியுற்றபோது, அவர் ஒரு ஆயுதமேந்திய கும்பலை அமெரிக்காவின் தலைநகருக்குள் அனுப்பினார். அங்கு அவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தாக்கினர். ஆவணங்களை எரித்தார். நடுவர் மன்றத்தால் மோசடி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். பாலியல் வழக்கிலும் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளார். அமெரிக்கா வலுவடைவதை உறுதி செய்ய அவர் தேவையில்லை. 21ம் நூற்றாண்டிற்கான போட்டியில் சீனா அல்ல, அமெரிக்கா வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* என்னைப் பற்றியா பேசினார்?
கமலா ஹாரிஸ் பேச்சு குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில்,’கமலா ஹாரிஸ் என்னைப் பற்றியா பேசுகிறார்?. அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறார். அதிகமாக நன்றி தெரிவித்துள்ளார். அவர் துணை அதிபராக பணியாற்றும் போது அவர் முன்வைத்த கொள்கை முன்மொழிவுகளை ஏன் நிறைவேற்றவில்லை. அவருக்கு மூன்றரை வருடங்கள் இருந்தன. ஆனால் தீங்கு தவிர வேறு எதையும் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.