
வாஷிங்டன் : செலவினங்களுக்கு போலி கணக்கு, தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நியூயார்க் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கினை எதிர்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலியல் குற்றச் சாட்டுகளை முன் வைத்தார். சமரசம் மேற்கொள்வதற்காக ட்ரம்ப் தரப்பில் இருந்து அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால் சட்ட கட்டணங்களுக்காக அந்த பணம் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் பொய் கணக்கு காட்டியதாக புகார் எழுந்தது.
இதை போன்று பல்வேறு குற்றங்களை மறைக்க 34 நிதி அறிக்கையில் பொய் கணக்கு காட்டியதாகவும் பரப்புரையின் போது நடந்த இந்த குற்றங்களால் தேர்தல் விதிகளை மீறியதாக ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி நியூயார்க் நீதிமன்றம் புகாரை ஏற்றுக் கொண்ட நிலையில், கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றார். இந்த நிலையில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு விசாரணைக்கு முந்தைய கட்டுப்பாடுகள் இல்லாமல் ட்ரம்பை காவலில் இருந்து விடுத்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ட்ரம்ப் மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் அறிவித்தார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று விசாரணையின் போது ட்ரம்பை நீதிபதி எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ட்ரம்பின் ஆதரவாளர்கள் நியூயார்க்கில் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பணியில் இறங்கிவிட்ட ட்ரம்ப் பரப்புரையை தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க சட்ட விதிகளின் படி ட்ரம்பிற்கு தண்டனையே விதிக்கப்பட்டாலும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையே உள்ளது.