வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். ஊட்டான் மாகாணம் சாட்லெட் சிட்டி அருகே புராவோ நகரத்தில் ஒரு வீட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக FBI கூறியுள்ளது.
முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளரான கிரேக் ராபர்ட்சன் என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் பைடன் மற்றும் ஹாரிஸ் ஆகியோரை சுட்டு கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது குறித்து விசாரிக்க ராபர்ட்சன் வீட்டிற்கு சென்றபோது அவர் காவலர்கள் மீது தாக்குதல் நடந்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கிரேக் ராபர்ட்சன் படுகாயமடைந்து உயிரிழந்ததாக FBI விளக்கமளித்துள்ளது.