வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 மாகாணங்களில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளி இருப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் பென்சில் மேனியா உள்ளிட்ட 3 மாகாணங்களில் டிரம்பை பின்னுக்கு தள்ளி கமலா ஹாரிஸ் குறைந்த வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக நியூயார்க்ஸ் டைம்ஸ் மற்றும் சியானா கல்லூரி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை இவை இரண்டும் சேர்த்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை விட டிரம்ப் முன்னிலை வகிப்பதாக தெரிவித்திருந்தன. 3 மாகாணங்களை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கமலா ஹாரிஸ் நேர்மையானவர், அறிவாற்றல் மிக்கவர் எனவும் நாட்டிற்கான தெளிவான பார்வையை கொண்டவர் எனவும் கருதுவதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில் கமலா ஹாரிஸ் இந்த ஆதரவை தேர்தல் வரைக்கும் தக்கவைத்து கொள்வார் என உறுதியாக சொல்ல முடியாது என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.