வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. வன்முறைகளை தடுக்கும் விதமாக மாநகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தை அனுப்பி வைத்து கலவரத்தை மேலும் தூண்டுவதாக அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் வெளிநாட்டினரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கலிபோர்னியா மாகாணத்தில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் காவல்துறையினர், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைக்க புற்பட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல மாறியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட போராட்டகாரர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். போராட்டம் 5வது நாளாக தொடர்ந்ததால் வன்முறை மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்படுவதை தடுக்கும் விதமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆணையை அடுத்து லாஸ் ஏஞ்சலஸ் விரைந்துள்ள ராணுவ வீரர்கள் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியா சட்ட அமலாக்கத் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் மாகாணத்துக்குள் 2,000 ராணுவ வீரர்களை அதிபர் டிரம்ப், சட்டவிரோதமாக பணியமர்த்தி இருப்பதாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையை டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலினாய்ஸ், ஜார்ஜியா, வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட மாகாணங்களிலும் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் டிரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.