வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தை ஹேக் செய்தது ஈரான் தான் என்று உளவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் பைடன் களமிறங்கி பின்னர் விலகினார். இதனையடுத்து கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின்போது டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த சில வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், டிரம்பின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விவரங்களை ஹேக் செய்வதற்கு முயற்சி நடந்ததாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசாரம் ஹேக் செய்யப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘அதிபர் வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசார விவரங்களை ஹேக் செய்வதற்கு ஈரான் தான் காரணம். அமெரிக்க அரசியலில் தலையிடவும், தேர்தலின் முடிவை மாற்றியமைப்பதற்கான ஈரானின் வெட்கக்கேடான முயற்சியின் ஒரு பகுதி தான் ஈரானின் இந்த இணைய ஊடுருவல்.டிரம்ப் பிரசாரத்தை தவிர கமலா ஹாரிஸ் பிரசாரத்தையும் ஹேக் செய்வதற்கு முயற்சித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதரகம் அமெரிக்க உளவுத்துறையின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஈரான் ஹேக் செய்யவில்லை என்றும் அமெரிக்க தேர்தலில் தலையிடும் நோக்கம் ஈரானுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அவ்வாறு உண்மையெனில் அதற்கான ஆதாரங்களை வழங்குமாறும் சவால் விடுத்துள்ளது.
* எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டிரம்பை நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில், எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல்களை வெகுவாக பாராட்டிய டிரம்ப், நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்க்கிற்கு தனது அரசின் கீழ் அமைச்சர் துறையை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.மேலும், வரி செலுத்துவோர் பணம் நல்ல முறையில் செலவழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு கமிஷன் அமைக்கும் எலான் மஸ்க்கின் கருத்தை டிரம்ப் வரவேற்றார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், ‘நாட்டிற்கு சேவையாற்ற தயார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.