புதுடெல்லி: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு, பாதுகாப்பு அளிப்பதிலேயே உண்மையான நீதி அடங்கி இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உபியை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்புக்கான பொதுநல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.அதில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். போக்சோ விதியின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதற்கான ஊழியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர் என கோரியிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உண்மையான நீதி என்பது குற்றவாளியை பிடித்து அவரை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவது மட்டுமே அல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பு அளிப்பதன் மூலமே இதை நிறைவேற்றியதாக கருத முடியும்’’ என்றனர்.
மேலும், உபி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 6 வாரங்களுக்குள் ஆராய்ந்து உதவி அளிக்கும் ஊழியர்கள் நியமனம் செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் வரும் அக்டோபர் 4 ம்தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.